Monday, March 2, 2015

Monday, February 11, 2013

கவிதைத் துளிகள்



                                                              

திருக்குறளோடு உறவாடுவோம்

வள்ளுவன் தந்த வாழ்வியல் என்றும்
தௌ்ளியத் தமிழின் தீஞ்சுவை அமுதாம்!
பிறவிப் பயனதை பெற்றே மகிழ
திறம்படப் படைத்தான் திண்ணம் அதுவே!
உறுதுணை யெனவே ஒட்டிய வழியில்
பெறுவோம் திடமே, பேறும் அஃதே!
திருக்குற ளோடுற வாடுவோம் தினமே
பெருகும் இன்பம் பொழியும் மழையே!


(குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
 மழலைச்சொல் கேளா தவர்)

குழல்விஞ்ச, யாழ்விஞ்ச கொஞ்சும் குரலில்
சுழலுமந்தப் பார்வையதில் தஞ்சம்! - கழறும்
மழலையதை ஆசையிலே நெஞ்சம் தழுவ
பழமேனி கன்னலதை மிஞ்சும்!



(வீழும் இருவர்க்கு இனிதே வளிஇடை
 போழப் படாஅ முயக்கு)

நெஞ்சோடு சேர்க்குமொரு நெஞ்சத்துள் ஈர்த்திடவே
பஞ்சாகப் பற்றுமொரு பாசமதைத் - துஞ்சாதக்
கண்ணிரண்டில் வைத்தவொரு காதற்தீத் தூண்டிடுமே
மண்ணுலகில் பெற்ற பேறு!


(அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
 பண்பும் பயனும் அது)

இல்வாழ்க்கை வெற்றியது இன்பத்தின் எல்லையது
சொல்லொண்ணா அன்பினிலே சேர்ந்த அறனுமது!
பண்பாகி ஊறும் பயனாகி உள்ளத்தே
எண்ணிலா தேகும் எனின்.


(அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
 கோடின்றி நீர்நிறைந் தற்று)

சுற்றம் அணைத்தொரு சொந்தம் பகிர்தலே
இற்றை உறவினில் இன்பமாம் - மற்றை
கரையிலா நீர்சேர் குளத்தினை ஒக்கும்
உரைப்பதும் தீதறு ஒன்று!


(நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
 வாளது உணர்வார்ப் பெறின்)

மாளாது இன்பத்தை மண்ணுலகில் மாந்தியவர்
நாளென வாழ்க்கையினை நீத்துவிட்டே - வாளதன்
கூர்மைக் கிரையாகிக் காற்றில் கலந்திடுவார்
கூர்தல் நினைவுக் கரண்!


(பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
 நெறிநின்றார் நீடுவாழ் வார்)

நிலையான வாழ்வொன்றை நீடுபெற வேண்டின்
விலையாக ஐம்பொறியை வெல்லு! - கலையாய்ப்
பயிலுதல் முற்றும் பயனாய் ஒழுக்கம்
உயிரினும் மேலென ஓம்பு!


   மூன்றெழுத்து

மூன்று எழுத்து முந்திவரும்
  முன்னே வந்து முனைந்துநிற்கும்
சான்று இன்றி பகன்றுவிடும்
  சாட்சி என்று ஏதுமின்றி
ஆன்றோர் வாக்கு பொய்த்திடவே
  ஆடும் ஆட்டம் ஏய்த்திடுமே
வான்அ ளாவும் சாலத்தில்
  வழுவும் உண்மைச் சத்தியமே!

சோம்பி வீணே திரிவதுவும்
  சோலி காணா துறங்குவதும்
கூம்பும் மனமும் பொறுப்பின்றி
  குறிக்கோள் இல்லாக் குணமேந்தி
வீம்பில் நாளைக் கழித்திங்கே
  வீணர் செய்யும் செயலுண்டு
காம்பில் ஒட்டா மலர்போல
  கடிதில் மாயும் வாழ்வுண்டு!

சும்மா கொடுத்தால் சுகம்பெறுவார்
  சுற்றம் உவக்கச் செயலாற்றார்!
சும்மாச் சும்மாச் சுற்றிவந்து
  சுமையாய் உலகில் வாழ்ந்திடுவார்!
சும்மா இருக்கும் இவராலே
  சுவையோ என்றும் பிறப்பதில்லை!
சும்மாச் சொல்லு பயமின்றி
  சுற்றி இவர்போல் பலருண்டு!

சிந்தை அடக்கும் இன்னொன்று
  சும்மா இருக்கும் திறனொன்று
விந்தை புரியும் மனமொன்று
  விண்ணில் தாவும் உறவென்று
முந்தை மனிதர் வழிநின்று
  முற்றும் மாறிய விதியொன்று
எந்தை இறைவன் தாள்பற்றும்
  என்னை மறந்த லயமொன்று!

     
      இரவின் புன்னகை
    

மேகம் தழுவி நிலவுமகள்
  முகத்தை மறைக்கும் இரவினிலே
மோகம் மிஞ்சும் வண்டினமும்
  மோதி முகரும் மலர்களையே!
தாகம் தீரா தென்றலதன்
  தேகம் உரசும் கொடிதனையே
வேகம் தாளா நதியினையும்
  கூடிக் கலக்கும் கடலலையே!

உற்றார் உறங்கும் வேளையிலே
  உள்ளம் உறங்கா ஈருயிர்கள்
சுற்றம் காணும் அமைதியிலே
  சொல்லத் துடிக்கும் உணர்வலைகள்!
கற்ற நாணம் கழன்றுவிட
  காமம் மீறும் கண்களிலே
முற்றும் வலிமைக் கரங்களிலே
  முழுதாய் இழக்கத் துடித்திடுமே!

இதயம் ஏங்கி எதிர்கொள்ள
  இன்பம் நல்கும் உறவொன்றை
உதயம் ஆகும் உணர்வுகளும்
  உள்ளே பாய வெள்ளமென
இதமாய் பெறுமோர் அணைப்பினிலே
  இனிதே பெருகும் ஆசைகளே
பதமாய் மேனி அழுந்துகையில்
  பாவை அன்பின் சங்கமமே!

பகிரும் பார்வைக் குளுமையிலே
  படரும் போதைப் புன்னகையோ!
முகிழ்க்கும் காதல் லயத்தினிலே
  மூழ்கும் மனதின் புன்னகையோ!
சுகிக்கும் உறவின் இனிமையிலே
  சூழும் நினைவின் புன்னகையோ!
தகிக்கும் உடலை முதன்முதலில்
  தணித்த இரவின் புன்னகையோ!

        
    எனக்குள் நீ

       

என்னில் குடிகொண்ட இன்னினைவே வாழ்வாக
உன்னில் தரிக்கும் உயிர்!


          தென்றல்

அன்னை மடியில் அணைத்தக் கரத்தில்
என்னை மறந்த இன்ப நிலையும்,
பள்ளிப் பருவப் பாங்கில் சுற்றித்
துள்ளித் திரிந்த சுகமும், சுமந்த
காதல் கணமும், கள்ளுறை மனமும்
சாதல் தாண்டிய சங்கம உணர்வும்,
நிலைத்த ஒன்றாய் நின்று நிலவும்
கலையா நினைவாய் கமழ்ந்து பரவும்!
மெல்லத் தொடரும் வாழ்க்கைப் பயணம்,
சொல்ல இயலாச் சுமைதனை வழங்கும்!
கனவுகள் மறைய, கற்பனைக் கலைய
இனமதை அறியா இன்னல் கூடும்!
பிணியும், மூப்பும் பின்னிய உடலும்
இனியும் தாளா ஏக்கம் வகுக்கும்!
எட்டாத் தொலைவில் எஞ்சிய இன்பம்
கிட்டா தருகில்! கிளைக்கும் வெறுமை!
செயல் திறன் துறந்த நலிவும்,
மயல் நீக்கி மௌனம் காக்கும்!
தகிக்கும் மனதைத் தழுவும் தென்றல்
சுகிக்கும் உணர்வில் சுமக்கும் நினைவே!


பாதை எங்கும் பூஞ்சோலை

பாதை எங்கும் பூஞ்சோலை
  பாதம் தொட்ட மலர்ப்பாதை!
கோதை ஆண்டாள் காதலுடன்
  கூடச் சூடும் பூச்சரத்தில்,
சீதை ராமன் தோள்சேர
  சீதளத் தென்றல் சேர்ந்துவர
காதைப் பாடக் கவிஞனுக்கே
  கற்றுத் தந்தப் பூஞ்சோலை!

காதல் உற்ற உள்ளங்கள்
  கலவிக் காண நாடிவரும்
ஈதல் ஒன்றே வாழ்வாக
  ஈட்டும் இன்பம் கோடிபெறும்!
சாதல் தாண்டியச் சங்கமத்தில்
  சாதனைப் படைக்கும் உறவொன்றில்
மாதர் காணும் பேரின்பம்
  வளர்க்கும் என்றும் பூஞ்சோலை!

சின்னஞ் சிறிய மொட்டெனவே
  சிரிக்கும் மழலைப் பேறுண்டு
தின்னத் திகட்டாக் கரும்பெனவே
  தளிர்கை நீட்டும் அணைப்புண்டு
கன்னக் குழியில் துயர்களைந்தே
  கவிதை பேசும் மொழியுண்டு
இன்னும் இன்னும் போதையிலே
  இன்பம் பொழியும் தேனுண்டு!

வாழ்வில் கனியாய்ச் சுவையுண்டு
  வளரும் ஆசை உரமுண்டு
தாழ்வில் முள்ளாய் இடர்தந்து
  தகிக்கும் துன்ப உணர்வுண்டு
ஏழ்மை எனவோர் இருள்சூழ்ந்து
  இடரில் தள்ளும் தவிப்புண்டு
ஊழ்வென் றிங்கே நிலைத்திடவே
  ஊன்றும் வேராய்த் திடமுண்டு!

வண்ணம் தெறிக்கும் பூஞ்சோலை
  வாடும் ஓர்நாள் நீரின்றி
திண்ணம் வாழ்வும் திரிந்துவிடும்
  திரையாய் மரணம் மூச்சின்றி!
எண்ணிப் பாராத் தருணமதில்
  எல்லா மகன்றே மறைந்துவிடும்
விண்ணில் தொடரும் வாழ்வொன்று
  விளையும் தளிர்போல் நிலைநின்று!


          காதலில் ஆயிரம்

காதலில் வீழ்வோரும் காமுறும் இன்பமே
காதற் கவியோரும் கொள்வர்! கலந்திடும்
காதல் கனவொன்றே காளையர் கண்ணிலே!
காதலில் ஆயிரம் காண்!


         கம்பன் என் தாய்

அம்மா என்ற அற்புதச் சொல்லை
கம்பன் என்றோர் கவிதைச் சொன்னது!
அன்பும் அருளும் அழகாய் இணைந்த
இன்பம் நல்கும் இனமெனக் காட்டி
என்னை ஈர்த்த இனிய ஓவியம்
கன்னித் தமிழது ஈன்றக் காவியம்!
தாய்மை தருமே தகைவிலாச் செல்வம்
வாய்மை போற்றும் வடிவு அவளே!
சீதள ராமன் சிரமேற் கொண்ட
காதல் மாட்சி, கருணைப் பெருக்கு,
பெற்றவர் பேணும் பெருங்கடன் தனக்கு
உற்றவர் சொந்தம் உரியவர் பந்தம்
இழந்தே நாளும் இணங்கும் தகைமை,
பழகும் பாங்கு, பழம்போல் கனிவு,
உறவாய்க் கண்ட உயிரினம் அனைத்தும்
மறவா நட்பில் மகிழ்ந்தே இணைய
தரணியில் காணும் தாயின் சிறப்பை
வரமெனப் படைத்து மகனாம் தயரதன்
உலகிற் களித்தான்! உவப்பினை எய்த
நிலவும் அழியா நூலில் வடித்து,
வாழும் வகையை வகுத்தே விரித்து,
சூழும் அருமைச் சுவையில் தந்து,
அண்ணல் கம்பன் அறிவுச் சுடராய்
எண்ணும் போதில் ஈன்றத் தாயாய்
என்னில் நிறைந்தான் பண்பில் வளர்த்தான்
மின்னும் ஒளியாய் வரித்தேன் நானே!


         வில் பூட்டணி வெண்பா

முகத்தோடு மெய்சேர்த்து முத்தாடி நீயே
அகத்தாடும் காதலதால் அர்ச்சிக்கும் போதே
சுகத்தினிலே ஆழ்த்திவிட்டுச் சொந்தமதைக் கொண்டே
இகத்தினிலே சேர்த்த இரவு!



        அச்சம் தவிர்

இருள்தனைக் கண்டே இன்னல் அடைவதும்
மருண்டே வாழ்வில் மயக்கம் கொள்வதும்
பித்தாய் மனதைப் பேய்ச்சுரம் ஆக்கிச்
சத்தாம் வலிமைச் சடுதியில் இழந்து
பெற்றவர் மாட்டே பேணும் பயமும்
உற்றவர் நினைந்து உறக்கம் கலைந்து
செய்யும் செயலில் செம்மை இன்றி
உய்யும் வழியினை ஒன்றாய்த் துறந்து
அச்சம் உறுவது அழகோ இங்கே
மிச்சம் உண்டோ மானிலம் தனிலே!

இருந்தும் சொல்வேன் இதனினும் இழப்பு
உருவில் இணைந்து உறையும் ஒன்று
மனிதப் பண்பினை மாற்றி அமைத்து
இனிமை மறந்து ஈதல் குறைந்து
வஞ்சம் தன்னை வளமாய்ப் பேணி
நெஞ்சம் அதிலே நேயம் குன்றி
அஞ்சுதற் கஞ்சும் ஆண்மை மறைந்தால்
மிஞ்சுவ தென்பது விலங்கின் தன்மை
அச்சம் தவிர்த்தல் அழிதலின் வழியே
இச்சகம் தன்னில் இழிவின் செயலே!


இரட்டை வெண்பா
(வெண்டளை சீர்கள் ஒரே முறையில்)

பேரொளியாய் புன்னகைத்து பெய்மழைபோல் என்நெஞ்சம்
சீரொளியால் பண்படவே சிந்தையிலே நீயொளிர்ந்து
தாயனைய நாடிவந்துத் தாள்சேர்த்து ஊழ்மாற்றி
நீயணைத்துத் தந்தசுகம் ‘நீ’!                                            (அகம்)

பேரொளியில் கண்கூச, பெற்றவுயிர் வாழ்ந்திடவே
சீரொளியின் தாளடியில் சேருலகம்! - நீரொளிரும்
வாழ்வதுவோ வானுயரும், விதிமாற்றச் சூரியனாய்த்;
தாழ்வகற்ற வந்ததுமோர் ‘தீ’!               (புறம்)


மடக்கு அணி

கனிவாய் மலர்ந்தே களிக்கும் இதழும்
கனி...வாய் திறந்தே கொடுக்கும் அமுதும்
இனிதாய் எனையே இழந்தத் தருணம்
இனியும் வருமோ விரைந்து!


சுகுமாரன் முருகையன் வாழ்த்து

அமைதி அன்பும் அருள்தானும்
  அண்டி வாழும் அகத்தினிலே
இமையும் பொழுதும் இல்லமதில்
  இன்பம் வார்க்கும் இணையரவர்!
உமைசேர் பாகன் உறுதுணையாய்
  உள்ளம் மகிழ வரந்தரவே
சுமையும் தாங்கி உளம்சோரும்
  சுற்றம் போற்றும் எளியரவர்!

சிவனை வேண்டி சிந்தையது
  சிறக்க வைத்த சுகுமாரன்
தவமாய் இருந்து பெற்றவரம்
  தகைமை தருமோர் திருப்பணியே!
இவண்ஓர் இருக்கை இறைவனுக்கே
  இனிதாய் அமைக்கும் இலட்சியமே
அவனால் விரைவில் நிறைவேற
  ஆகும் காலம் விரைந்திடவே!

உற்றார் வியக்க உயர்பெறுக!
  உம்மில் அனைத்தும் வளம்பெறுக!
பெற்றோர் வாழ்ந்த அடிச்சுவட்டில்
  பெரிதும் உவக்க வாழ்ந்திடுக!
கற்றோர் நாடும் கவிதையிலே
  காலம் கடந்தே ஒளிர்ந்திடுக!
பற்று மிகுந்து பரமனவன்
  பாசம் பொழிந்து காத்திடுக!


















   
Thursday, December 22, 2011

Kavinger Rajeswari Simon

Saturday, November 12, 2011

Chevalier Hubert Simon's Blog

Wednesday, October 26, 2011

கவிதைத் திரட்டு

விழலுக்கிறைத்த குருதி !

தேவ மகன் நீ, தூய மரி செல்வன் நீ
திவ்விய வதனம் நீ, தீர்க்க தரிசனம் நீ
பரிசுத்த ஆவி தங்கும் மையம் நீ
நெறி மறந்த பூமிதனில் ஏன் வந்தாய் ?
கூடி வாழும் பண்பற்ற மந்தை கூட்டம்
கூடு விட்டு பாயும் ஆசை ஓட்டம்
கணத்தில் குணம் மாறும் பித்தலாட்டம்
கண்டும் இவரிடையேன் பிடிபட்டாய் ?
நேசமற்ற மனதால் கசடு கொண்ட எண்ணம்
வீசுகின்ற பார்வையால் வெட்டி வீழ்த்தும் வன்மம்
தூசு போலும் வாழ்வின் மாயத் தாக்கமதில்
மாசற்ற நீயேன் கறைபட்டாய் ?
பதவி, புகழென்ற போதையில்
பணம், இனமென்ற மாயையில்
சிக்கி சிறைபட்டோர் முன்னில்
சீராளன் நீயேன் சிறைபட்டாய் ?
வாயில்லா சீவனைத் தனக்குணவாய்
கதியில்லா ஏழையினைத் தனக்குரித்தாய்
அயலானை, தன்னைப் போலொத்தானை
சிதைக்குமிந்த நரகத்தில் ஏன் வதைபட்டாய் ?
உன்னைப் பின் தொடரா மூடருக்கு
கண்மூடி கயமை பேணும் பாவியர்க்கு
பிழையென்று உணராத நீசருக்கு
விழலுக்குக் குருதி ஏன் சிந்தினாய் ?
ஆண்டவரை அன்புசெய பணித்தாய்
அடுத்தவரை நேசியென போதித்தாய்
அறிவுரைக்குப் பரிசாய் அறைந்தார் சிலுவையில்
ஆயினும் இவருக்காய் ஏன் உயிர் விட்டாய் ?

மரணமும் மறுபிறப்பும்

நினைக்கும் பொழுதில் நிலைதடு மாறி
வினையின் பயனோ, வீழ்த்தி விடுமோ?
இன்பக் கனவும் ஈங்கழிந் திடுமோ?
மின்னல் வேகம் விரைந்தே வந்து,
தன்னை அழித்தே தரணியில் இருந்து
என்றும் மறைத்தே இல்லா தொழிக்குமோ?
இவ்வா றெல்லாம் இனியும் மருண்டே
கவ்வும் இருளில் கலங்க வேண்டாம்!
அனுபவ மென்னும் அன்னைத் தருவாள்
கணுவிலும் வாழ்வில் கற்கும் பாடம்!
நான்எனும்” விளக்கம் நாடிய உள்ளம்
வான்தே டியொரு உண்மையும் காணும்!
ஐம்புலன் நுகரும் இச்சக இனிமை
நம்மில் படரும் நாடக மாயை!
உறவுகள் காட்டும் உணர்வின் பேதம்
பறவைச் சிறகாய்ப் பதைப்பை விரிக்க,
பந்தம் அறுத்து, பாசம் துறந்து,
சொந்தம் தொலைத்த சிந்தனைப் போதில்,
தெளிந்த மனமும் தீர்வை நாடும்
களிப்பின் ரேகை கண்ணில் தெரியும்!
ஒன்றே இறுதி, “உள்ளதும்” அதுவே!
மன்றமாம் இறைவன் மாசறு பொன்னடி!
என்றே அறிவின் எல்லை புகட்டும்
நன்றும், ஆன்ம நாட்டமும் அஃதே!
வரவும், கண்ட வாழ்வும் முடிய,
மரணம் என்பது மறுபிறப் பாகுமே!

காதல் வாழ்க!

அன்றொரு இன்பநிலை அள்ளியே தந்ததும்
இன்றொரு வெற்றிடம் ஈந்தே மறைந்ததும்
மன்றத்தில் மாளாத வன்துயர் சூழ்ந்திட
வென்றதும் காதலே வாழி!

பாரதிதாசன்
செந்தமிழ்ப் பாடிச் சிவந்த நா
செந்தமிழ் எண்ணிச் சிரித்த அதரம்
செந்தமிழ் மூச்சால் சமைந்த உருவம்
செந்தமிழ் காக்க முனைந்த வடிவம்
பைந்தமிழ்க் காவலராம் பாரதிதாசனுக்கு
சிரந்தாழ்ந்த எந்தன் வணக்கம்!

அமைதியில் அழுகின்றேன்

சுடர்விட்டு ஒளிபரப்பும்
சூரியனின் கதிர் மங்க
இரவு தரும் அமைதியிலே அழுகின்றேன்.

இதழ் விரித்து சிரித்த அரும்பு
உதிரும் அந்த தருணத்தின்
மரண அமைதியிலே அழுகின்றேன்.

கடைக்கண் காதல் வளர்த்த பாசம்
வாழ்க்கை பாரம் சுமக்க மறுத்து
மாயமான அமைதியிலே அழுகின்றேன்.

உடன் பிறந்து ஊனில் பிணைந்து
கலந்த உறவை வேரோடு அறுத்த
தாபத்தின் அமைதியிலே அழுகின்றேன்.

மலராய்த் தோன்றி முள்ளாய் மாறி
மனக்காயம் குருதி; சொட்ட
தேய்ந்த கனவின் அமைதியிலே அழுகின்றேன்.

உன்னை நம்பி பாதம் பற்றி
தன்னையளித்துக் கொண்ட திடம்
பறி போன அமைதியிலே அழுகின்றேன்.

நீ தருவாய் நீ பெறுவாய்
என்னுரிமை ஏதுமில்லா
வெறுமையின் அமைதியிலே அழுகின்றேன்.

தீருமா கலக்கம்?

பிறப்பெடுக்க வைத்து விட்டாய்
மறுத்துக் கூற வழியில்லை!
அடுத்து வலி தந்துவிட்டாய்
விடு பெறவோ விதியில்லை!
உறவு தேடி அலைந்தேனிங்கு
ஒட்டுதலோ கிட்டவில்லை!
அன்பு நாடி களைத்தேனிங்கு
ஆறுதலோ எட்டவில்லை!
உண்மை வழி புரியவில்லை
உயிர்ப்புக் கென உழல்கின்றேன்!
மீட்பு எது தெரியவில்லை
மீண்டும் எண்ணி கலங்குகின்றேன்!

தென்றல்

கல் தோன்றி மண் தோன்றா
காலத்துத் தமிழ் - போல
வான் தோன்றி கடல் தோன்றும்
காலத்துத் தென்றல்

மலர் தவழ்ந்து, மடு மிதந்து
மணந்து வந்த தென்றல்
மழை நனைந்து, குளிர் துவைத்து
மறுகி வந்த தென்றல்

கம்பனும் பாரதியும் கவிதையிலே
களித்துப் பாடிய தென்றல்
புலவனும் புரவலனும் போற்றியே
புகழ்ந்து கேட்ட தென்றல்

வீடு தோறும் நாடி வந்து
வீசி நின்ற தென்றல்
பள்ளி வாசல் தேடி மழலையரைப்
பாட வைத்த தென்றல்

கவின் மிகு சோலையிலே
காதலுக்குத் தூதுபோன தென்றல்
கலவியிலே காதலர்க்கு
களைப்பு தீர்த்த தென்றல்

உறவுகளை சேர்த்து வைத்து
உறங்க வைத்த தென்றல்
பிரிவினிலே நெருப்பாய் நின்று
புரிய வைத்த தென்றல்

சோர்ந்து நிற்கும் எளியவர்க்கு
சுகம் சேர்க்கும் தென்றல்
இல்லாமை இருள் நடுவே
இனிமை தரும் தென்றல்

நேற்றடித்த தென்றல் மட்டும் - சூறை
காற்றடித்த இடம் போல
தேற்ற வொண்ணா குழப்பத்திலே - என்னை
ஆற்றா விட்ட தென்றல்

காற்றினிலே இளையவளாம் தென்றல்
பூக்காட்டினிலே இணைந்தவளாம் தென்றல்
தீண்டுமின்பம் தந்தவளாம் தென்றல் - இன்று
மாண்டு வரும் நிலையிலான தென்றல்

தூசு பட்டு, மாசு சேர்ந்து
துவளும் அந்தத் தென்றல்
புகை கலந்து, தரம் இழந்து
நோய் பரப்பும் தென்றல்

மகரந்தம் தூவி நெஞ்சினிலே
மகிழ்வு தந்த தென்றல்
வஞ்சம் தீர்க்க மனிதத்திலே
நஞ்சு சேர்க்கும் தென்றல்

மென்மையாம் தென்றல் தனை
வன்மையாம் புயலாக்கி
மனித இனம் அழியுமுன்னே
மண்வளமாம் உயிர் காப்போம்!

உறவுப் பாலம்

உறவென்று பிறக்கும் இன்பம்
பிரிவது உலக மாயம்
துறந்தவர்க்கும் சூழும் கோபம்
தகிப்பது உணர்வின் பாபம்
அறிந்தவருள் ஊடும் பேதம்
துளைப்பது மனித நேயம்
முறிந்த பின்னர் இணையா நேசம்
இருப்பது அறிவின் சோகம்
பரம்பொருளின் காட்சி மாற்றம்
புரிவது வாழ்வின் மையம்
புரிந்த பலன் இதயம் பேசும்
நிலைத்து நிற்கும் உறவின் பாலம்.

வாழ்க்கைத் துறவறம்

உருப்பெற்று உடன் ஆன்ம பலம் துறந்தேன்
கருவறையின் வெளி வந்து பழகிய இதம் துறந்தேன்
தாய்ப் பால் மறந்து அணைப்பின் சுகம் துறந்தேன்
பன்மொழிப் பயிலப் புகுந்து ஓய்வதனைத் துறந்தேன்
காதலில் வாடி நின்று உலக பந்தம் துறந்தேன்
கல்யாண வாசலிலே சுய விருப்பு துறந்தேன்
பெற்றவரைப் பிரிந்து கொண்ட பாசம் துறந்தேன்
தாயாகி நிற்கையிலே உறக்கம் துறந்தேன்
மழலைச் சுகம் வேண்டி சொந்த நலம் துறந்தேன்
இல்லற இனிமை காக்க என் சுகம் துறந்தேன்
பெருகும் உறவு பேண தன்னியல்பு துறந்தேன்
துன்பச் சுமை தாங்க வளர்த்த கனவு துறந்தேன்
ஈன்ற மக்கள் பாதை பிரிய உறவு துறந்தேன்
முந்தி வரும் முதுமையிலே இளமை துறந்தேன்
தொடர்ந்த நாளதிலே வலிமை துறந்தேன்
நினைவுகள் மங்கிய பின் சுவை துறந்தேன்
மரணப் படுக்கையிலே உணர்வு துறந்தேன்
இனி கூட்டை விட்டுப் பிரிகின்ற உயிர் துறப்பேன்
எஞ்சி நிற்கும் உடலையும் மண்ணில் துறப்பேன்
இத்தனைத் துறவிருக்க இன்னுமொரு துறவெதற்கு ?

கவிதை அறம்

அளப்பரும் கோள்கள் அனைத்தும் படைத்து
வளமதை வாரி வழங்கும் இறையே!
விளித்தேன் அருளால் விழைந்து எனக்கும்
அளிப்பாய்க் கவிதை அறம்!

கடவுளின் கவிதை

படைத்த உலகினைப் பார்த்துக் களித்திட பார்த்திபனே
இடையிலா வண்ண இயற்கை வளந்தரும் இன்னிசையில்
கொடையினை யொத்தே குவியும் கலைஞர் கோலங்கள்
தடையிலா ஊற்றெனத் தந்திடும் கவிதையுமே தரணியிலே!

காணாத எழிலுரு

எண்ணிலா மாந்தர் கண்டும்
எழிலுரு உரைப்பார் இல்லை!
விண்ணிலே நிறைந்து நிற்பாய்
விரும்பியுன் அன்பு வேண்டி
கண்ணிலோர் தாகம் கொண்டு
கரைகின்ற மனதை வைத்தேன்
தண்மதி எனவே நெஞ்சில்
தவழ்ந்திட நேரில் வாராய்!

கண்ணன் கருணை

வண்ண மலரும் வனிதை அழகும் வாடிவிடும்
எண்ணத் திகட்டா எழிலும் வடிவும் ஈங்கழியும்
தண்ணொளி நல்கிடும் சன்னதி தேடு தருமிதமே
கண்கவர் கள்வனாம் கண்ணன் கருணை காட்டிடவே!

புகழ் சாற்றுக!

பாரதம் காக்கும் பயன்தரும் பண்பைப் பயின்றிடுவோர்
பாரள வும்புகழ் ஓங்கிட வாழப் பறையறைவீர்!
சாரமாம் ஞான ஒளியைப் பரப்பும் தகைசான்றோர்
சாரவே நின்று அவர்புகழ் என்றுமே சாற்றுகவே!

உறவான தமிழ்

முக்காலம் முடிவின்றி
முன்னின்று நிற்பவளின்
முகத்தைப் பார்த்து
எக்காள ஓசையொன்று
எந்நாளும் என்னெஞ்சில்
என்றும் கேட்டுப்
பக்கத்தில் பரவசமாய்
பனித்துளியாய் நானுணர்ந்த
பண்ணே போன்று
இக்காலம் சூழ்ந்திங்கு
இனிமைதரும் எழில்தமிழே
இயக்கும் தாயே!

தமிழுக்கு அழைப்பு

கம்பன் புனைந்த காவியமாம்
கவிதைக் களமே கண்டவளே!
வம்பு பேசும் மனிதரையே
வணங்க வைக்கும் வடிவழகே!
நம்பி உன்னைச் சரணடைந்தே
நங்கை நானும் பாடுகிறேன்
இம்மண் வியக்க உன்புகழை
எங்கும் ஏற்றி வைப்பாயே!

வெல்லும் தமிழ்

பழியறு நாடு பேசும்
பைந்தழிழ்ச் சிறப்பு ஒன்றே!
எழில்தரும் வீடு தோறும்
இன்மொழிச் சுவையும் நின்றே!
விழியது எனவே மக்கள்
விரும்பிய தொன்றே என்றும்!
அழிவது பிரிதே அன்றி
ஆள்வது தமிழே அன்றோ!

பாதகம் புரிவோர் மாட்டும்
பரிந்துமே இரக்கம் காட்டும்!
சாதனை செய்வோர் எங்கள்
சரித்திரத் தமிழர் மட்டும்!
காதலின் பெருமை கூறும்
கவிதைகள் கடலாய்ப் பொங்கும்!
வேதனை வென்றோர் நாமே
வெல்வதும் தமிழே தானே!

அன்னியர் பலரும் இங்கே
ஆட்சியும் புரிந்த நாளில்
வன்முறை காட்டா மாண்பு
வல்லமை தந்தோர் பண்பு
தென்னவர் பெற்ற துண்டு!
செம்மொழி பலவும் ஏகும்
அன்றைய பொழுதில் வென்று
ஆண்டதும் தமிழே அன்றோ!

இளமையின் வடிவாய் வாழும்
இயல்பதே உந்தன் தன்மை!
வளமென பெருகும் இன்பம்
வாழ்வினில் உன்னால் உண்மை!
தளமென மொழிகள் சுற்றி
தழைத்திடக் களமாய்த் தாங்கும்!
அளவிலா ஆற்றல் கண்டு
அயலாரும் வியந்த தாயே!

தனியிடம் உனக்கே பாரில்
தந்ததுன் எழிலார் வண்ணம்!
கனியமு தேயுன் மாட்சி
கணனியும் பறையும் சாட்சி!
இனியொரு தாழ்விலை உனக்கு
இனிமையே உயர்ந்தே செல்வாய்!
பனிமலை போன்றே நிற்பாய்
பாரினைத் திறனால் வெல்வாய்!

உனை மறவேன்!

தாயினும் என்னைப் பரிந்தெடுத் தாட்கொளும் தன்மைதன்னை
வாயினிக் கப்புகழ்ப் பாடிப் பரப்பிடும் வாழ்வதனில்
சேயினைக் காப்பாய் எனதுயிர் வற்றிச் சீர்குலைந்தே
போயினும் உன்னை மறவேன் பசுந்தமிழ் பொன்மகளே!

பொங்கல் திருநாள்

மங்கா நிலவாய் - தைப்
பொங்கல் ஒளிரட்டும் !
சிங்கத் தமிழர் - தம்
அங்கம் சிலிர்க்கட்டும் !

எங்கும் இனிமை - இங்கு
தங்கிப் பெருகட்டும் !
அங்கம் வனிதை - என்றும்
தங்க உருக்காட்டும் !

அழகு நடையில் - வண்ணம்
பழகும் கலைகாட்டும் !
மழலை தவழ்ந்து - வரும்
குழலின் வடிவாக்கம் !

சுற்றம் அருகில் - இன்னும்
ஏற்றம் அளிக்கட்டும் !
வற்றா கருணை - அன்பு
முற்றும் பொழியட்டும் !

இயற்சீர் வெண்டளையால் வந்த சிந்து
(இசைப் பாட்டு)

. . சி.

சுதந்திரம் என்றோ பெற்றோம்,
சுத்தமாய் மறந்தே போனோம்.
இதந்தரும் நாட்டுப் பற்றை,
இயல்பென துறந்தே விட்டோம்.
சிதைந்திடும் உறவு கண்டும்,
தீண்டாமை நோயைக் கொண்டோம்.
மதந்தரும் போதை ஒன்றே
மார்க்கமாய் நினைவில் வைத்தே !

விடுதலை வேள்வி காக்க,
வீறுடன் எழுந்த மாந்தர்
சடுதியில் மறைந்தார் அந்நாள் !
சட்டமாம் இருட்டில் தள்ளி,
கெடுமதி அரசு தந்த
கேட்டையே பரிசாய்ப் பெற்று,
படுகுழி வீழ்ந்த போதும்
பாரதம் அவரின் மூச்சே !

விண்ணிலே நிலவுக் கொப்பாய்,
வீழ்ந்திடா அறிவுத் தீயாய்,
மண்ணிலே வந்த துன்பம்
மறையவே நீதி தேவன்
தென்னகம் தன்னில் கப்பல்
தென்றலாய் அசைத்து ஓட்ட,
அன்னியர் நெஞ்சில் பீதி,
அனலென தகித்த தன்றே !

வெள்ளையர் மமதை தன்னை
வெட்டிய வஉசி நாமம்,
தௌ்ளிய தமிழும், வெல்லும்
திண்ணிய ஞானச் சீரும்,
அள்ளியே வழங்கும் வள்ளல்
ஆங்கில புலமை கேட்டு,
கொள்ளையிட் டிங்கு செல்வம்
கோடியே சேர்த்த நாளே !

மைந்தனாம் இந்தியத் தாயின்
மகத்துவம் அறியா வம்பர்,
வந்தனைக் குரிய செம்மல்
வாதைபட் டழிய நாளும்,
நிந்தனை செய்த காவல்
நீள்துயர் அளித்த செக்கு,
சிந்தனைக் கெட்டாத் தீமை
சிறையினில் நேர்ந்த தங்கே !

பாரதி, கட்ட பொம்மன்
பாங்கென இசைத்த கீதம்,
சாரதி வஉசி தானும்
சேர்ந்திட எழுந்த நாதம்,
சோரமோ போகா வீரம்
சோர்ந்திடா உணர்வின் ஆக்கம்,
பாரத அடிமைத் தாயின்
பாதையை மாற்றிய தன்றே !

இன்னொரு இழிவு மீண்டும்
இன்றைய காலம் ஏற்கா !
பன்னெடும் யுகங்கள் சுற்றி
பாதகம் புரிந்தோர் சென்றார் !
தன்புகழ் அறிந்தே இன்று
தரணியாள் வேட்கை கொண்டு,
மன்பதை வெற்றி கொள்ள
மறுபடி எழுந்தோம் நின்றே !