Friday, February 18, 2011

“நான்”

வான்வெளியை வெறிக்கின்றேன்!
   வண்ணமிலாப் பாழ்வெளியாய்
       வனப்பு குன்றித்,
தேன்நிலவாய்த் தினமிருந்த
     தெவிட்டாத வாழ்வதனைத்
        துடைத்து விட்டே,
ஊன்உருக்கும் உயிர்மூச்சை
     உள்வாங்கி நடைப்பிணமாய்
         உலவச் செய்தே,
ஏன்என்ற கேள்விதனை
     எதிர்கொள்ள இயலாமல்
          இறுக்கம் கொள்ளும்!

மலர்ச்சோலை மணம்பரப்பும்!
     மனங்கண்ட உறவினிலே
          மகிழ்வு பொங்கும்;
இலதாகி, நகையதனை
      இழந்தேகி, இல்லமதும்
           இனிதே காணா
உலவாத உன்னினைவை
       உள்ளமதில் உருபதித்து
            உணர்த்தும் ஊனம்!
வலம்வருமோ வடிவேந்தி
        வற்றாத நதியெனவே
             வாட்டம் போக்க!

மனதினிலே மாற்றமதை
   மலரவைக்கும், அழுத்துகின்ற
      மாறாத் துன்பம்
கனவெனவே மறைந்துவிடும்
   கருத்திலென வலியநின்று
       காணும் காட்சி,
இனமறியாத் துயரமதை
    இதயமதில் நிரப்பிவிட்டு
        எனையே ஏய்க்கும்!
கணத்தினிலே ஒலிக்கின்ற
    கண்மயக்கும் இசையாவும்
        கான லாகும்!

சித்தமதில் இதமளித்துச்
   சித்திரமாய் வட்டமிட்ட
     சிறப்பு யாவும்
மொத்தமாகத் தானிழந்த
  மொழியதனை நுாலேந்தி
     வாழ்வில் என்றும்
சொத்தாக விளங்கிநின்ற
  செல்வத்தைப் பறிகொடுத்துச்,
     சொல்லும் அன்பும்
இத்தரையில் பொதிந்தவரி
   இனித்தொடராச் சோகமதை
      இன்றும் கூறும்!

பொழுதைக்கொன் றுவிடநானும்
  போராடி நாளெல்லாம்
      போதும் தோற்றும்,
எழுவதாய் நடத்துகின்ற
  ஏக்கமிகு நாடகத்தை
     இனியும் இங்கே
பழுதிலாது நடித்திடவே
  பாழுலகு துணைசெய்யும்
     பரிவு காட்டி !
முழுமையுறா வாழ்வதான
  முயற்சியொன்றே இனித்தொடர,
      மிஞ்சும் வாழ்வே!
 
திருமதி சிமோன்