Thursday, October 13, 2011

காதலின் அலைக்கழிப்பு




அழகிய உலகின் வார்ப்பினிலே
  அன்னம் போல அசைந்திருந்தேன்!
பழகிய உறவும் பாசமிகு
  பந்தம் தருமோர் அணைப்பினிலே
சுழலும் எண்ணக் கற்பனையும்
  சுற்றும் வண்ணக் கனவுகளும்
வழங்கும் வளமை வாழ்வதுவே
  வற்றா செல்வம் என்றிருந்தேன்!

பொன்மே னிதனில் அம்பெனவே
  பொருந்தி நிற்கும் கண்களுமே
கண்ணால் விளைந்த புண்ணதிலே
  காமக் கணைகள் நுழைந்தனவோ!
என்தன் உள்ளம் நைந்ததனால்
  எல்லா உணர்வும் இழந்தேனே!
புண்வழி நுழைந்து என்மனதும்
  பொங்கி இடமே மாறியதே!
                                                                                                                             
வெட்ட வெளியில் நின்றிருந்தேன்
  வெறித்துப் பார்த்தும் இலக்கில்லை
கட்டுக் கடங்கா காதலிலே
  கண்ணீர் மல்கி குலைந்திருந்தேன்!
பெட்டிப் பாம்பாய் என்னினைவும்
  பேச்சும் இன்றி கலைத்ததுவே
தட்டும் உள்ள அதிர்வதனில்
  தளர்ந்தே நாளும் மலைத்ததுவே!

உன்னை என்னைச் சேர்த்ததெது
  என்னில் உன்னை இணைத்ததெது?
கண்ணில் நிறைந்த மாயமெது
  கனவில் நின்று கலக்குவதாய்
மண்ணில் வேற்றுச் சுவையின்றி
  மாறாத் துன்பம் தந்ததுவாய்
விண்ணில் பரந்த என்மனதை
   வீணாய்க் கலங்க வைத்ததெது?                            

0 comments: