Saturday, October 15, 2011

அகவும் கவிதைகள்

அம்மா

கன்னல் மொழியில் கனிந்த இசையும்
மின்னல் ஒளியில் மிதமாய்; நிறையும்!
அம்மா என்னும் அமுத மழையே
இம்மா நிலத்தே இதமாய் பொழியும்!
என்னைத் தந்து என்னுள் இணைந்தாள்
மின்னும் கண்ணில் மீண்டும் அவளே!
பாசம் என்ற பாலைப் புகட்டி
நேசம் கொள்ள நேரிய வழியில்
கலையில் விஞ்சக் கற்பில் மிஞ்ச                
நிலையாய் மகளை நித்தம் பழக்கி
மாட்சி பெற்று மாண்பு உயர
வேட்கைக் கொண்டாள்இ வெற்றியும் கண்டாள்!
பரிவு காட்டிய பாசத் தாயின்
அறிவு சார்ந்த ஆளுமை பெற்றேன்!
அன்பு அளித்த ஆற்றல் கண்டேன்!
பண்பால் விளைந்த பணிவும் கொண்டேன்!
பற்றி இருந்த பந்தம் மறைந்து
சுற்றி நின்ற சுகமும் இழந்த
என்னைக் காக்கும் எனக்குள் உறையும்
அன்னைத் தந்த அழகுத் தமிழே!

அருட் திரு மரிய பாஸ்கல்

துறவு என்பது தூக்கம் தொலைத்து
உறவு பிரிந்து உண்மை தரித்து
இறையைத் தேடி இன்னிசைப் பாடி
கறையிலா மனதைக் காப்பது மட்டோ!
மக்கள் நலனில் மங்கா உணர்வு
எக்கா லமுமவர் ஏற்றம் கனவென
விழைவதும் பலியாய் மெய்தரு துன்பம்
உழைப்பில் களையா உத்தம குணமும்
தேவனை நாடும் திகட்டா வழியாய்
சீவனை உயர்த்தும் செந்தமிழ்க் கூற்றே!
போன்து வாஸ்நகர் பொலிவுடன் திகழ
ஆன்ம நலம்நல்கு(ம்) அன்னையை இருத்தி
அருள்வடி வேந்தி அரும்பணி பாஸ்கல்
இருள்தனை அகற்றி இன்பஞ் சேர்த்திட
அன்றொரு நாளில் அன்பின் வடிவாய்
இன்றும் நிலைத்த எங்கள் துணையாய்
ஏற்ற அறத்தினை இருபத் தைந்து
சாற்றும் ஆண்டுகள் சாதனை எனவே!
பகலவன் ஒளிபோல் படர்ந்திட வாழ்த்தும்
இகத்தினில் உள்ளம் எங்கும் உண்டு!
ஆயினும் சொல்வேன்இ அன்னவர் தொண்டினை
தாயினும் மேலாம் தாங்கிடும் பண்பினைப்
பெறவே பலரும் பெரிதும் அவர்தம்
சிறகினை நாடிச் செல்வர் என்றுமே!

கபிலன் பாராட்டு விழா

புகழது ஒன்றே பூதல வேட்கை!
இகமதில் என்றும் ஈங்கிவர்க் கீடிலை
எனுமோர் நிலையே எய்திடத் துடிப்பார்!
கணுவிலும் நிறையும் கனவும் இதுவாய்!
ஆயினும் சிறப்பும் அண்டு வதிலை
வாயினிக் கும்சொல் வாழ்விப் பதிலை!
அன்பும்இ அறிவும்இ அளவிலா நேயமும்
பண்பும்இ செருக்கிலாப் பணிவும் கொண்டால்
அன்றே சூழும் ஆற்றலும் போற்றலும்!
வென்றே வாழும் விளைவும் பயனும்!
புகழும் சேரும் புலமை வழியே
தகவோர் தரவே தரணியில் நாளும்!
முத்தமி ழறிஞர் முதுபெரும் கவிஞர்
சித்தராம் கவியில் சீருடை அன்பர்
கருவிலே கொண்ட கவினுறு திறத்தால்
அருவியாய்ப் பாயும் அருமைத் தமிழே!
செவிகள் குளிர சிந்தையும் மகிழ
கவிதைகள் பொழியும் கார்மே கமெனவே!
நூற்பலப் பயின்ற நுண்ணிய ஞானமும்
சீர்பட வாழ்ந்த சிறப்பியல் பதுவும்
தெவிட்டாத் தமிழின் தீதறு சுவையும்
புவியோர் தேடும் புண்ணிய மனைத்தும்
ஒருங்கே கண்டார் ஒன்றாய் இணைந்தார்!
மறுவிலா வாழ்த்தினை மாண்புற அளித்தார்!
வீசும் தென்றலில் விலையிலா மகிழ்வும்
பூசும் நறுமணப் புன்னகைப் பகிர்வும்
கன்னல் மொழியில் கனியும் மனமும்
விண்ணைத் தொடுமோர் வித்தகர் கவிதையும்
கூடிய களத்தின் குன்றா ஒளியாம்
நாடிய சான்றோர் நலமே பெருகவே!

கி. பாரதிதாசன் வாழ்த்து

 கவிதைகள் பொழியும் கடலெனப் பெருகி
 செவியில் இழையும் செந்தமிழ்த் தழுவி
தேன்மலர் சிந்தும் தீஞ்சுவை யமுதம்
வான்புகழ் ஏந்தும் மன்னவன் சரிதம்!
பாரிசு தாங்கும் பாரதி யெனவே
வாரிசு இங்கே வந்ததெம் தவமே!
தாசனுக் கின்னோர் தாசன் உருவே
வாசம் வீசுது வண்தமிழ் மணமே!
வித்தகர் நாடி வளையும் நாணல்
விதைத்தது நாளும் விலையிலாத் தேடல்!
ஒத்தது கண்டீர் உற்றவள் மனமே
வித்தது தமிழின் வியப்புறு இனமே!
மக்கள் நலனும் மாசில்லா குணமும்
தக்க உறவும் சாலப் பெறுக!
தாழ்விலா நிலையும் தகைந்த சீரும்
வாழ்வும் வளமும் வழங்குக இறையே!

                      சிவனார் அளித்த சீவன்  

சிவனார் அளித்த சீவனோ! தமிழன்
தவமோ! பெற்ற தனமோ! அழகன்
முருகன் அமர்ந்து முதலாய் அப்பன்
குருவாய்த் தந்த கொடை தானோ!
அகத்தியன் வசமே அடைக்கலம் கொண்ட
இகத்தினை வென்ற இன்ப வளமோ!
வள்ளுவன் சுவைத்த வண்ணக் கலவையோ!
கள்ளம் இல்லாக் கன்னிச் சுடரோ!
கம்பன் பாடிய கவிதை வடிவோ!
நம்மவர்க் கென்றே நயம்படும் இசையோ!
பாரதி நாடிய பார்புகழ்ப் பெண்ணோ!
பாரதம் கண்ட பன்முகப் பார்வையோ!
வேந்தர் மடியின் வேணு கானம்!
போந்த தலைமுறை போற்றிய கலையுரு!
பாவலர் நாவின் பண்ணமைக் கூத்து!
பூவையர் எங்கள் பொலிவுறு சொத்து!
இலக்கியப் பீடம் இலக்கணப் பழமை
இலங்கும் மன்றம்! ஈடிலா இளமை!
இசையில் உருகி இனிமை பெருக்கி
அசையும் தென்றல்! அளவிலா வாய்மை!
எல்லை கடந்து எழுச்சி அடைந்தும்
பிள்ளை இனமாய்ப் பேணும் தாய்மை!
தருக்கர் தமக்குத் தன்னிலை வழுவாப்
பெருமை தன்னைப் பெற்ற பாங்கு!
கனியின் சுவையும் கன்னல் சாறும்
தனித்தே இயங்கும் தனக்கே உரிமை!
தேனமு தூட்டும் தெவிட்டா உணவு!
வேனலில் வேண்டும் வெண்பனிக் குளுமை!
சென்ற நாளில் வேள்வி படைத்து
வென்ற ஒன்றாய்த் தீதறு நிலையில்
இன்றும் வாழ்ந்தினி என்றும் வாழும்
தன்மை செழித்து சான்று பகரும்
பூந்தமிழ் மாறாப் பொலிவுடன் வளர்கவே!
தீந்தமிழ் என்னும் செம்மொழி வெல்கவே!

தமிழினத்தின்  விடிவெள்ளி  

உலகம் உய்ய உயர்ந்த நெறியில்
உலவும் காற்றாய் உணர்ந்த பண்பில்
உறவுகள் மலர உண்மை அன்பில்
அறிவு சார்ந்த  ஆற்றல்  திறனில் 
தரணி மீதில்  தமிழன் வாழ்ந்தே 
பரணி  பாடிய பல்லவி உண்டு!
நிலைகெட் டவன்னெறி பிறழ்ந்து உச்சி
மலைதொட்  டபுகழ்  மண்ணில் சாய  
புல்லனாய் வெறும் புலையனாய் எங்கும்
வல்லதம் மரபு வாழா தொழிய
நின்றவே  ளை யொரு  நிலவு தோன்றி 
குன்றின்   மீதொரு குன்றா ஒளியை
மீண்டும் ஏற்றி மீளவும் வைத்தது
மாண்ட தமிழர் மாண்பும் உயர்ந்தது!                                                                       தந்தை பெரியார் தமக்கு என்றே
செந்தமிழ் போற்றி சிந்தை ஈந்தது
கலப்புத் திருமணம் கலையாய் மாறி
கலங்கரை விளக்காய்  காலம்  வென்றது
வெங்கா  யமென்றே  வெருமுரை வீரரை 
செங்கண்  கொண்டே வெட்டிச் சாய்க்க
சாதி ஒழிப்பில் சமபந் திஉணவு 
சாதிக்  கும்வெறி சமத்துவப்  போக்கு!                                                                                                                  
சிறகை ஒடிக்க சிறையில் அடைத்தும்
சிறுத்தை எந்தைச் சீறிச் சென்றது
மூடக் கொள்கை மூடு விழாதனில்
மூளும் விடியலுன் முன்னே தமிழா!
பெண்ணை ஆண்டு பேதமைச் செய்து
மண்ணைப் போலவள் மாட்சி அழித்து
வாழ்ந்தவர் அழிய வந்தது வசந்தம்
வாழ்வில் கண்டோம் வண்ணக் கோலம்!

இயக்கம் கண்டது இசையில் மாற்றம்
இசைவு கொண்டது இன்ப ஏற்றம்
தவழ்ந்து வந்தது தண்ணொளி பரவி
தவத்தமிழ்  வானில் தாழ்நிலை உயர
இருண்ட இரவின் இன்னல் தீர்ந்து
மருண்ட மாந்தர் மலர்ச்சி பெறவே
விடியாத் துயரின் விடுதலைத் தரவே
விடிவெள்  ளிதோன்றி விண்ணில் நின்றதே!

திருவள்ளுவரும் திருக்குறளும்

பொய்யில் புலவன் புகழுடைத் தலைவன்
மெய்யாய் உரைத்த மேன்மைகள் கோடி!
தெய்வ மகனோ தீதறு செல்வன்
செய்தவம் எதுவோ சீர்மிகு தமிழர்!
முப்பால் பருகின் மூளும் இன்பம்
எப்பால் தருமோர் இதமே இங்கண்!
நாவலன் என்பார் நானிலம் எங்கும்
மூலவன் அவனே முத்தமிழ்க் கவிஞன்!
வெண்பா எனலும் விலையிலாக் குறளின்
தண்சீ(ர்) ரடிகள் தவழும் நினைவில்!
அறமதை நாட்டி ஆற்றலைப் பெருக்கும்
துறவறப் பாதை துல்லிய மாக்கும்!
இல்லறம் பேண இனிமையுங் காண
வல்லதோர் பலமே வாழ்வுக் கதுவே!
அரசும் இணைந்த அமைச்சும் செயலில்          
முரசம் கொட்ட மொழிவான் நீதி!
பொதுமறை யாகியே பூதல மதிலே
புதுவிதி நல்கும் புத்தொளிப் பெருக!
மொழியும்; பெயர்ந்து மோனம் கலைத்திட
விழிகள் திறந்து வீணரும் திருந்திட
உலக(ம்) முழுதும் உவந்து ஏற்றனர்
வளம்பெற நாளும் வாழ்த்திப் போற்றவே!
மானிடர் உயர மாண்புறு வழியே
தேனினு(ம்) மினிய தென்தமிழ் அமுதே!
பெற்றதோர் செல்வம் பெரிதும் காத்திட
உற்றதோர் செயலாம் ஓதி உணர்தலே!
வள்ளுவன் தன்னை வானிடை உயர்த்த
தௌ்ளியக் குறளின் தீந்தமி(ழ்) ழருந்த
கம்பன் தாசர் கற்றிட முனைந்தார்
எம்மவர் செயலே ஏற்றம் பெறுகவே!


எட்டாம் ஆண்டு கம்பன் விழா
நன்றியுரைக் கவிதை

தன்னிக     ரில்லாத்     தமிழன்     பண்பு
நன்றி       நவிலும்     நல்லதோர்   பாங்கு!
கம்பன்      கழகம்      கலைஞர்    தம்மை
எம்மனம்     உவக்க     ஏற்றியே     புகழும்!

இலக்கியச்   சுடராம்      (இ)ராமலிங்   கமும்உடன்
இளமைத்    தென்றலாம்   இன்சொல்    சண்முக
வடிவேல்     தானும்      வழங்கிய    தமிழின்
வடிவுக்      கெங்கள்     வானுயர்     நன்றி!

உரைபல    விதமே      உவந்து     நல்கிய
நிறைமதி    யாளர்       நிலவும்      களமிது
அனைவர்    திறனும்     ஆன்றோர்    அறிவும்
முனைந்து    நன்றி       முன்னின்    னுரைத்தோம்!

ஆலயம்     தன்னில்     அருந்தமிழ்   மாந்திட
சாலவும்     உதவிய     சான்றோர்    மாட்டு
மாறா       நன்றி!      மன்றம்      தனிலே
சீரா        டவந்த      செந்தமிழ்    ஒளிரஇ

மங்கல      விளக்கினை  மறையா     அன்பென
எங்கும்      விளங்க     ஏற்றிய      இணையர்க்(கு)
முகமலர்     நன்றி!      முற்றும்     மறந்து

அகமகிழ்ந்   திடவே      அரும்பெரும்  பட்டிகள்
கூடிப்       பகிர்ந்திட    குறையா     இன்பம்
நாடி        வந்தது;     நாவார      நன்றி!

பாடிப்       புகழ்ந்த     பரவசம்     கண்டோம்
ஆடிக்       களைத்த    அன்னவர்க்   கால்களில்
கொஞ்சும்    சலங்கை    கொள்ளை   யிட்டது
மிஞ்சும்     நிறைவில்    மீண்டும்     நன்றி!

கவிமலர்     அளித்த     கபிலனும்இ   லினோதினி
கவின்மிகு    அருணா     எழில்துசி    யந்தியும்
கவிதைச்    சரமும்     கவிமல்     லன்தரு
செவிநிறை   பதமும்      தெவிட்டா    நிலையில்
களிப்புடன்   தந்தோம்     காவிய      நன்றி!

கலியுகம்    வியக்கக்    கற்றோர்     பலரும்
வெற்றி      கண்டார்     வியக்கும்    வண்ணம்
பற்றிப்      படர்ந்தது    பட்டயம்     அவர்மேல்
சூழும்       வியப்பும்   சொல்லொணா  மகிழ்வும்
எழுமே      நன்றியும்    எல்லையில்  லாமல்!

வழக்கா     டுமன்றம்     வாதிட      வந்தார்
வழங்கி     மகிழ்வோம்   வற்றா      நன்றி!

போரிடா     வாழ்வு      பூதலம்      தனிலே
வேரிலா     மரமே!      மேதினி      மீதினில்
விரும்பும்    சொற்போர்   விளைக்கும்  இன்பம்
இரும்பு      மனமும்     இளகிட     வைக்கும்
இன்று       எங்கள்      இனிய      நன்றி
மன்றம்      தனிலே      மகிழ்வுற    அளித்தோம்!

தொகுத்தார்  நிகழ்வினை   சுவைபட     நாளும்
பகுத்துக்    கண்டோம்    பகிர்ந்தோம்   சுவையினை
இருவர்      பொழிந்த    இன்தமிழ்    அருவி
பெருகிட     அளித்தோம்  பெரிதும்     நன்றி!

ஒளியினில்   நனைந்தோம்  ஒலியினில்   மிதந்தோம்
மிளிரும்     எழிலில்     மொழிவோம்  நன்றி!

உணர்வுக்    குமந்த      உயிருக்     கும்தமிழ்
உணவோ    அதைத்தாங்  குமுடலுக்    குஉரம்
இரண்டையும்  தந்தார்     இடைவிடா   வண்ணம்
இரண்டறக்   கலந்தோம்   இன்று       நன்றியில்!

தன்னிறை    வெய்திட    தமிழ்மொழி  மாந்திட
பன்முறை    அழைத்தோம் பருகிட      வந்தீர்
தங்கள்      வரவும்     தணியா     ஆவலும
பொங்க     வைக்கும்    போதெலாம்   நன்றியே !

வள்ளல் சடையப்பன் இன்று வந்தால் ...

  இன்பம் அளிக்கும் இனிமை பெருக்கும்
துன்பம் தீர்க்கும்; துயரைத் துடைக்கும்
வன்சொல் களைந்து வாய்மை கூட்டும்
பன்முகம் தந்து பல்சுவை நல்கும்
கன்னித் தமிழின் கவிதை வண்ணம்
தன்னைத் தாங்கித் தரணி வென்றான்!
வாரி வழங்கும் வள்ளல் சடையனைப்
பாரி வடிவில் பார்த்தது உலகம்!
முடியுடை வேந்தர் முற்றும் வெறுக்கும்
துடிப்பும் துவளாத் துணிவும்இ கனிவும்
உருவெனப் பொலியும் உறுதுணை தேடி
விருப்பால் ஆங்கே விரைந்தனர் புலவர்!
சொல்லும் பொருளும் துள்ளும் நடையும்
வெல்லும் நயமும் வேண்டிய லயமும்
கலந்து நிற்கும் கம்பன் பாட்டில்
மலரும் மனமோ மதுவை மாந்தும்!
மகுடம் சூட்டி மார்க்கம் காட்டி
மிகுந்த பரிவை மிகையாய்ப் பொழிந்து
கவியை உயர்த்தி அவனுக்(கு) அரணாய்
புவியில் நிலைத்த புகழும் பெற்றான்!
அன்னவன் இன்று அகிலம் வந்தால்
மன்னவன் தானும் மலைத்துப் போவான்!
கொடையே வழங்காக் கோமகன் கண்டு
விடையே தெரியா விடுகதை யாவான்!
இங்கே அரசியல் இரவலர் இரப்பதும்
மங்கா புன்னகை மாண்புகள் அளிப்பதும்
எல்லாம் பதவி! எதிலும் பங்கு!
வில்லாய் வளைவார் வீணில் கதைத்தே!
கல்லா ஏழை கண்ணீர் துடைக்க
பொல்லா மனிதர் பொறுப்பு தவிர்க்க
பேருக்கு இலவசம்இ பெரிய விளம்பரம்
ஊருக்கு அளிப்பார் ஒற்றை நாமம்!
அன்பளிப்(பு) பென்ற அழகுப் பெயரில்
தன்னையே விற்கத் தளிர்க்கும் லஞ்சம்!
சாவு மட்டும் சாதி பிரித்து
காவு கொள்ளும் காட்சிகள் எங்கும்!
பெண்ணைக் கொள்ள பேரம் பேசும்
மண்ணில் என்ன மாட்சி நிலவும்!?
கல்வி புகட்டிக் காசு பறிக்கும்
புல்லர் நிறைந்த பூமி தனிலே
நொந்த மனமும் நோகும் புலனும்
வந்த சடையனை வறுத்தே எடுக்கும்!
இழிந்த மாந்தர் இனியும் மாறார்
வழிதனை மாற்றி வள்ளலும் செல்வான்!
அணைக்கும் கரமும் அன்பும்இ அறனும்
பிணைக்கும் உறவும் பிறவா திருந்தால்
வளரும் கலையும்இ வாழும் திறனும்
அளப்பரும் கல்வியும் அருகிப் போகும்!
இன்னொரு கம்பன் இனிமேல் இல்லை
என்னும் நிலையே என்றும் வாழும்!
தன்னலம் பேணி தனக்கென புவியில்
தன்னிகர் இல்லாத் தனஞ்சேர் மாக்காள்
நாள்கள் இருப்பது எத்தனை நமக்கோ
தாள்கள் இதற்கு இத்தனைத் தகுமோ!
இசைபட தன்னால் இயன்றதை அளித்து
திசைகள் தோறும் சிறப்பதைப் பெற்று
வாழ்வீர் ஈகையில் வளர்வீர் நாளும்
தாழ்ந்தவர் தம்மைத் தாங்குவீர் மீண்டும்
சடையனும் பிறப்பான்இ சந்தம் தொடர
படைப்பான் பாசுரம் பாங்காய் கம்பனுமே!

    ஆன்மீகச் செம்மல் அரவிந்தர்

தோன்றின் புகழொடு தோன்றுக! அன்றே
வான்உறை வள்ளுவன் வாழும் வழியைச்
சீரொடு செலுத்தச் செப்பினான் முறையே!
பாரொ(டு) இசைந்த பாவையர் காதலும்
மெய்யுணர் மழலை மென்மை தீண்டலும்
உய்யவே வாழ்வில் உறுதுணை செய்யும்!
இல்லறம் தாண்டியே இனிமையும் சேர்க்கும்
நல்லறம் நாடும் நற்பணி வேட்கை!
யாதும் ஊராகி யாவரும் உறவாய்த்
தீது புரியாத் திண்மை மனத்தர்
நாடு என்றும் நலமுற வேண்டியே
தேடுவார் நாளும் தௌ்ளிய வழியே!
துறவறம் என்பது துறக்கும் அகந்தை
பிறகது போக்கும் பிறவித் தொடரை!
அலையெனப் பரவும் அளவிலா நினைவும்
கலைந்திட நிலவும் களிப்பேரு வகையே!
ஒருமுகப் படுத்தின் ஒன்றெனச் சேரும்
திருமுகம் கண்டிடும் திசையும் அதுவே!
இறையவன் அடியில் இணைந்திடும் தன்மை
உறையவே மனதில் உண்மையும் பிறக்கும்!
தெய்வச் சக்திஇ தௌ்ளிய இன்பம்
துய்த்திடல் வேண்டும் துயருறு மனமே!
எளிய வழியினை ஏழையும் அறிய
வலிய சொன்னதும் வழிகாட் டியதும்
தேன்சுவைத் தமிழைத் தெவிட்டாப் புதுவை
ஆன்மிகச் செம்மல் அரவிந் தருமே!

இல்லறம் வாழ்க !

இன்ப நிலையும் இல்லற வாழ்வும்
அன்பு மனையாள் அமைந்திட மலரும்
மக்கள் பேறும் மங்கா நலனும்
தக்க உறவும் தரணியில் நிறையும்
அறமும் பொருளும் அருகிய ஒன்றாய்
திறனும் பொருந்திய திடமும் பெற்றாய்
தானும் உயர்ந்து தரமதை வளர்க்கும்
வானும் வாழ்த்தும் வல்லமை கொண்டாய்
சொல்லில் வளமை சொக்கும் இனிமை
வெல்லும் தமிழை வளர்க்கும் மேன்மை
அமைதி வடிவின் அழகிய பாங்கில்
அமைந்த தோற்றம் அருளினைக் காட்டும்
சத்திய உருவாய் சாந்தம் தவழும்
நித்தமும் நின்று ஞானம் பொழியும்
கலிய பெருமாள் காதலில் உருக
எளிமை அழகும் எழிலார் குணமும்
மாதரி கொண்டே மாதவம் செய்ய
மூதறு இணையர் வாழ்க வாழ்கவே!

கம்பன் பிறந்த தமிழ்நாடு

கம்பன் கவியின் கவினுறு சுவையை
தம்பால் கொண்டே தமிழை வளர்த்தீர்!
முத்தமிழ் தனக்கு முற்றும் அளித்து
சொத்தாம் அதனைச் சுற்றம் எனவே
இத்தரை மீதில் இன்பந் தேக்கி
வித்தகர் பலரை விளைத்த நிலமே!
பாசம் சொந்த பந்தம் என்றே
நேசம் கொள்ளும் நேரிய உறவில்
நித்தம் நிலைத்து நீவிர் மகிழ்வீர்!
சித்தம் முழுதும் சீரிய வகையில்
கற்றுத் தேர்ந்தார் கலைகள் பலவும்
வற்றா நதியென வாழ்ந்தார் பிறர்க்காய்!
அற்றைய நாளில் அவர்தம் செயலே
இற்றுத் தளரா தினிதே தொடர
வள்ளுவம் முதலாய் வான்புகழ்க் கம்பன்
தௌ்ளிய விதமாய்த் தெரிந்தே காட்டிய
பக்குவம் தனிலே பாங்காய் உயர்வீர்
திக்கெட் டிலுமே தீந்தமிழ் பரவவே!








0 comments: