Thursday, October 20, 2011

கவிதை மொட்டுக்கள்

                



    

               


புரியாப்புதிர்

கடவுளெனப் பெயர் கொண்டு என்னறிவைக் கடந்துநின்றாய்!
பரமனென நிறைந்துநின்று நன்னிலையின் கதவடைத்தாய்!
இறைஞ்சுவோரின் குறைகேட்கா இறைவனானாய்! உய்விக்கா
மறையானாய்! மாண்பானாய்! மதியானாய்! மகிழ்வானாய்;!

மழையானாய், புயலானாய், இயற்கையின் சீற்றமானாய்!
ஏழைகளின் வாழ்வழிக்கும் கூற்றுவனின் வடிவானாய்!
நம்பிஉனை நாள்தோறும் நாடிவந்து பணிபவர்க்கே
வெம்பிஉயிர் குலைக்கின்ற நோய்தந்தாய்! துயர்தந்தாய்!

பசியென்ற தீயொன்று மறவாமல் நீபடைத்தாய்!
ஆசையெனும் மிருகத்தை அகத்திடையே கொடுத்திட்டாய்!
அகந்தையை அழிக்காத புன்னெறியை அளித்திட்டாய்!
பொறாமையை வளர்த்துலகில் பகுத்தறிவைப் புதைத்திட்டாய்!

ஆயிரம்நல் அழகிருந்தும் அழுகுரலாம் உரிமைதந்தாய்!
இன்பமிகு ஊற்றிருந்தும் துன்பத்தின் சுவைதந்தாய்!
வாழுமுயர் ஆவலுந்த வீழ்கின்ற பரிசுதந்தாய்!
பாழுமுளம் வருந்திடவே இவ்வாழ்வின் முடிவுதந்தாய்!

இறுகிவிட்ட மனதினிலே அன்புமழை நிலைப்பதெங்கே!
மறுகிவிட்ட உணர்வினிலே அருள்மழை பொழிவதெங்கே!
போராடும் பிறப்பினிலே புண்ணியங்கள் சேர்வதெங்கே!
பண்புற்று மனந்தேறி இப்பிறப்பு உயர்வதெங்கே!

குறையனைத்தும் பகற்கனவாய் மறைகின்ற நாளென்றோ!
நிறையனைத்தும் எம்மவர்க்கே கிடைக்கின்ற நாளென்றோ!
பிறப்பனைத்தும் இன்புற்று வாழ்கின்ற நாளென்றோ!
உயிரனைத்தும் உவப்பெய்திச் சிரிக்கின்ற நாளென்றோ!

வரம்பின்றி உன்னருளை இவ்வுலகம் பெற்றொளிர்ந்தால்
உரம்பெற்று மனிதகுலம் நலமோங்கி உயர்ந்திடாதோ!
திறம்படைத்த உன்படைப்பி;ல் குறையிருந்தால் நன்னெறியாம்
அறம்வகுத்த உனக்கதுவே நிறையாமோ! இனிதாமோ!


இயலாத ஒன்று!

சின்னஞ்சிறு வயதில் செப்பினாயாம் சாத்திரங்கள்!
சிகரம்தனில் நின்று உரைத்தாயாம் தத்துவங்கள்!
கடல்நடுவே நடந்து காட்டினாயாம் அற்புதங்கள்!
கணக்கில்லாப் புதுமைகளில் செய்தாயாம் மாற்றங்கள்!
உனைப்போல எமையெண்ணித் தந்துவிட்டாய் கட்டளைகள்!
“உன்னைப்போல் பிறனைநேசி” - ஏற்குமாஎம் நெஞ்சங்கள்?!

மீண்டும் பிறந்து வா!

வித்தகரொடு பன்னிருவயதில் விந்தைபோல் தர்க்கித்து
சீர்மிகும் உண்மைகள் செப்பியச் செம்மலே!
இன்னும்மாறா இத்தலைவர்க்(கு) இவ்வண்ணம் அறிவூட்ட
மண்ணின் அருமைந்தனாக மீண்டும்நீ பிறந்துவா!

மக்களாய்ப்பிறந்து பண்பற்று மாக்களாய்திரியும் எங்கள்
மாந்தர்க்குவாழும் வழிகூறி மானுடம்எங்கும் தழைக்க
புதுமைகள் பலசெய்து புதுப்பித்து வாழவைக்க
புண்ணியனே இப்பூமியிலே மீண்டும்நீ பிறந்துவா!

இங்கேபசியென்றும் நோயென்றும் இல்லாக் கொடுமையென்றும்
கேடுமலிந்தது போதாதென்று களவென்றும் கொலையென்றும்
கலகமென்றும் போரென்றும் ஆயிரம் அழிவுண்டு
அதினின்று உயிர்ப்பிக்க மீண்டும்நீ பிறந்துவா!

பிறக்குமுன்ஒன்றை நினைவில்கொள்: பின்தொடர்ந்து கையளிக்க,
குற்றம்சுமத்தித் தீர்ப்பிட, குற்றுயிராய் வதைத்திட,
கழுவேற்றிக் கொன்றிட, கருணையின்றி அகன்றிட,
கடல்போல் திரள்பவர்க்கு கணக்கில்லை இப்போது(ம்)!

எதிர்பார்ப்பு

அன்புருவாய் வந்தவனே!
இன்முகமாம் குளிர்நிலவே!
தண்ணொளிக் கண்வீசி
புன்னகைத் தேன்தெளித்து
தத்திவந்து தளிர்நடையில்
தித்திக்கும் மழலைசிந்தி
முத்தமொன்று பதிக்கையிலே
சித்தமெலாம் மயங்காதோ!
இளந்தென்றல் வந்திங்கே
மென்கரத்தால் எனைத்தழுவி
மீண்டுமெனை அணைத்திடுமோ?
என்னுயிரும் துளிர்த்திடுமோ! 

தகிக்கும் தாபம்

அலையும் நினைவுகளில் நிறைந்துவிடு
அன்பில் உள்ளத்தை மூழ்கவிடு
கல்மனம் அருளால் கரையவிடு
கண்களில் நீரைப் பெருகவிடு
செவியில் தேனாகப் பாய்ந்துவிடு
நாவிலுன் நாமத்தை உலவவிடு
கவியும் துயரத்தை விலக்கிவிடு
குவியும் கவலையை விரட்டிவிடு
தகிக்கும் தாபத்தைப் போக்கிவிடு
வாட்டும் தாகத்தைத் தணித்துவிடு
உன்னில் என்னை உருகவிடு!

முரணுக்கு மறு பெயர்

ஏசுவை மீட்பர் என்றான்
சிலுவையிலே அறைந்து கொன்றான்!

புத்தனைச் சத்தியன் என்றான் - அவன்
தத்துவத்தைக் காற்றில் விட்டான்!

காந்தியைத் தந்தை என்றான்
அண்ணலின் உயிரைக் குடித்தான்!

பெண்ணைச் சரிபாதி என்றான்
அடிமைத்தளையில் பூட்டி வைத்தான்!

மக்களைச் செல்வம் என்றான்
கூலியாய் அலையச் செய்தான்!

உதட்டிலே சிரிப்பை வைத்தான்
உள்ளத்தில் நஞ்சை கலந்தான்!

பிறர்நலம் காக்க என்றான்
கொலைகளவில் முந்தி நின்றான்!

வாழவிதி நூறு சொன்னான்
மீறவகை ஆயிரம் கண்டான்!

அமைதியை வளர்க்கச் சொன்னான்
யுத்தவெறி கொண்டு அலைந்தான்!

இயற்கையைத் தொழுது வந்தான் - அதன்
வளத்தையோ கெடுத்துத் தொலைத்தான்!

சிந்திப்பவன் மனிதன் என்றான் - நானோ
முரணுக்கு மறுபெயர் என்பேன்!

முதுமை

கண்கள் ஒளியிழந்து பார்வை மங்கி வெறிக்கின்றன!
காணக் கூடாததையேக் கண்டதாலா?
கண்டவரை ஏளனமாய்ச் சுட்டெரித்ததாலா?

செவிகள் பழுதடைந்து ஒலிவாங்க மறுக்கின்றன!
செல்லரித்துப்போன ஊர்க்கதைகளையேக் கேட்டதாலா?
ஏற்றமிகு உரைகளைப் புறக்கணித்ததாலா?

கைகள் நடுங்கிச் செயலிழந்து விட்டன!
பிறர்குற்றம் சாட்டவே நீண்டதாலா?
அள்ளித்தரும் சுகத்தையே அறியாததாலா?
                                                                                        
கால்கள் ஓய்ந்து முடங்கி விட்டன!
புறஇன்பம் நாடி அலைந்ததாலா?
அயலார்க்குதவ சுணங்கியதாலா?

வாய்க்குழறிப் பேச்சு அற்றுவிட்டது!
வந்தபடியெல்லாம் வார்த்தைகளைக் கொட்டியதாலா?
வல்லவனின் புகழ்பாட மறந்ததாலா?

அறிவு தடுமாறி நிலை மறக்கிறது!
ஆற்றமிகு செயல்களைச் செய்யாததாலா?
தரமற்றதையே தனதாக்கிக் கொண்டதாலா?

மெய்தளர்ந்து சுருங்கி விட்டது!
பொய்வாழ்வில் மூழ்கியதாலா?
மெய்மறைக் கோவிலாய் விளங்காததாலா?

உயிர்த்துடிப்பு அடங்கி ஒடுங்குகிறது!
உற்றாருடன் நேசம் கொள்ளாததாலா?
உன்னத வாழ்வை உணராததாலா?

முதுமையா இது அல்லது
முற்றுமறிந்தவன் தரும் தண்டனையா?!

எதைத் துறப்பது?

நிலவின் தழுவலில் மின்னும் கடல்
மழையின் சங்கமத்தில் உயிர்க்கும் பூமி
மலர்களின் வாசத்தில் கலக்கும் தென்றல்
குயிலின் இசையில் மயங்கும் மனம்
துறக்க வேண்டுமோ, உலகம் மாயையென!

சுட்டெரிக்கும் வெப்பத்தில் வரளும் பூமியும்
காய்ந்து கிடக்கும் அந்த ஆற்றுப்படுகையும்
துறக்கச் சொன்னால் மயங்கலாமோ?
பகலுக்குப்பின் இரவும் கோடைக்குப்பின் வசந்தமும்
வருமென மறந்து துறக்கலாமோ?

அன்பும் பாசமும் ஆசையில் மலர்ந்தால்
அழிவின் பிறப்பிடம் எனலாமோ!
நட்பும் காதலும் வாட வைத்தால்
துன்பத்தின் உறைவிடம் எனலாமோ!
ஒன்றிய உறவினைத் துறப்பது எதற்கோ?

மழலையாய் அன்னை மடிதனில் தவழ்ந்ததும்
மழலைக்கு அன்னையாய் வாரி அணைத்ததும்
உற்ற நண்பனாய் சுற்றித் திரிந்ததும்
கலந்து உருகிக் காதலில் திளைத்ததும்
நஞ்சென வெறுத்துத் துறப்பது தகுமோ!

நான்கு சுவருக்குள் பெற்ற இதமும்
விரிந்த உலகுக்கு வேண்டிய பதமும்
இணைந்து வாழத் தேர்ந்த குணமும்
தன்னலம் மறந்த செயலும் இருக்க
எதை, ஏன், எதற்கோ துறக்க!

சிறுவட்டம் தனில்சுழலும் பாமரன் தான்
தன்கடமை செவ்வனே ஆற்றா விட்டால்
பெருஉலகம் செயலற்றே போகும் அன்றோ!
அவன்மனை துறந்து, தன்மனைவி மக்கள்
நிலைபிறழ்ந்து துன்புறுதல் நீதியும் ஆமோ!

பிறர்நலிவில் கனிந்த மனம் உருகி
துயர்தீர வேண்டுகின்ற மாண்பை விட
இயன்றவரை கரம்நீட்டும் பண்பை விட
பாமரனால் என்னதான் செய்ய இயலும்?
எளியவனால் எதைத்தான் துறக்க இயலும்?

அன்பால் அருளால் இறையுறையும் இடமாகி
இன்ப நிறைவில் அவன் வசமாகி
குழைந்து கரைந்து சுகம்பெறும் லயத்தில்
பரமனில் கலக்கும் சீவனை விடவும்
எதைத்தான் தருவான்? எதைத்தான் துறப்பான்?

அவனில்ஒன்றி பெறும் இன்பமும் துன்பமும்
அவன்தரும் கொடையென பணிந்தே ஏற்று
இரண்டும் ஒன்றாகி வாழ்வதை விடுத்து
வாழ்விக்கும் நிலைக்கு இவன்வந்த பின்னே
இல்லாமற்போன இவன் எதைத் துறப்பான்?!



இளமை மிளிரும் இனியபண்ணும
வளமை துளிர்க்க வழங்கும் தமிழும்
மகளிர் வளர்க்கும் மனித உணர்வும்
இகத்தில் தருமே உயர்வு!

சீரிளம் வாழ்வு சிதைத்து இனிவரும்
நீரிழி வென்னுமோர் நெஞ்சின் நினைவே
இனிமை உணர்வினை இல்லா தொழித்து
தனிமையில் தள்ளும் தாழ்!

இதயமோ அன்பினை ஏந்தும் வடிவம்
இதமே சகத்தினில் ஈந்திடும் நாளும்
விதவித நோய்கள் விரைந்தழிக் கும்முன்
பதமலர்க் கண்ணனைப் பற்று!


பாடுவாய் எண்ணரும் பண்சேர் கவிதைகள் 
நாடுவாய் என்றும் நறுந்தமிழ் இன்பமே!
தேடுவாய் நாளும் தெவிட்டா மலரடி
கூடுவாய் கூத்தனின் தாள்!


மனஅழுத்தம் தந்திடும் மங்கையரின் துன்பம்
இனக்கொடுமை வீழ்ந்திடும் ஈங்கெனில் என்றும
கனிவுடன் ஆண்களும் காட்டிட அன்பே
இனிமையு மங்குமே ஏகும்!

அவைக்கு வணக்கம்! அருவிருந் திட்டு
சுவைக்கப் படைப்போம்! சுவைதரு கன்னல்
கவிதையும் தந்து கவினுறு தேனைச்
செவிபடச் சேர்ப்போம் சிறந்து!


ஆற்றல் வளர்ந்து அறிவு பெருகிட
போற்றும் திறமை புவிதனில் சாற்றும்
உயரிய பண்பது உன்னதர் காட்டும்
செயலும் அதுவே செப்பு!

ஓசோனின் ஓட்டை ஒழியாத் தகிப்பினை
மாசோ தருமே மாய்த்திடும் நோய்களை
வன்முறை நல்குமே வாழ்வின் முடிவினை
என்றுதான் மாறும் இது!


எத்தனை மார்க்கமோ, எத்தனை வர்க்கமோ
அத்தனையும் இங்கேயினி அத்தனைக் காட்டா!
வராதிருப்பது அன்பெனும் வற்றாதவோர் பண்பே 
இராமா நுசரின் இயல்!







இனியவளே என்னுயிரே இன்தமிழே! பண்ணாய்க்
கனிந்தவளே பல்லுயிரும் கண்கிறங்க என்நாவில்
வந்தமர்ந்தே சொல்லழகும் வண்ண நடையழகும்
இந்நாளில் பொழிக இனிது!

குறிக்கோள் இலாது களிக்கும் இளமை
தறிகெட் டலைந்து சுழலுமே வீணிலே
நஞ்சென வாழ்வை நசிக்கும் புகையிலே
பிஞ்சில் பழுத்த பழம்!

   உழைக்கப் பிறந்திட்ட உத்தமப் பெண்டீர்!
          இழைத்திடும் இன்னல் இமயமாய்ச் சூழ்ந்தும்
          உலகம் மகிழ உயிர்கள் பெருக்குமோர்
          நிலமகள் போன்றவர் நீர்!


சீராடும் வள்ளுவனின் செந்தமிழ் போன்றதோர்
பாராளும் நற்கவிதை பண்பை வளர்க்கும்!
ஓதாமல் விடுகின்ற ஒண்கவிதை நாளும்
போதாது போதாது போ!


            தமிழ் வணக்கம்

அணிசேர் அழகே! அமிழ்தின் சுவையே!
மணிமுடி வேந்தர் வரித்த வடிவே!
தனிப்பே ருவகை தரித்தேன் மலர்தாள்
இனியும் மறப்பனோ யான்!

தலைவர் வணக்கம்

அன்பும் அறிவும் அமைந்த திறனும்
இன்பத் தமிழின் இயைந்த வளமும்
பழுதிலா வாக்கும் பயந்த தலைவா!
வழுவா துனது மறம்!

அவை வணக்கம்

சான்றோர் பலரும் தகைந்த தலமதில்
வான்புகழ் ஏந்தும் வளர்ந்த தமிழின்
சிறப்பதை நாடும் களிப்புறு நெஞ்சே!
திறமதைப் போற்றிச் சேர்!

தலைவர் வணக்கம்

சிந்தை மகிழ்ந்து சுவைத்திடும் ஏழிசை
சந்தமும் பண்ணில் சமைத்திடும் பாரிடை
என்தன் உறவாம் எழில்தமிழ் போலவே
பொன்மனச் செல்வன் புகழ்!

அவை வணக்கம்

பெருமதி கொண்ட பெரியோர் அவையே!
மருவிலா இன்ப வளமாம் தமிழின்
சிறப்பதைப் போற்றிச் சேர்த்திடும் செல்வம்
பிறப்பதில் பெற்றிடும் பேறு!

அவையின் அழகாய் அருகிய இன்பச்
சுவையுறும் வண்ணச் சுடராம் - கவிதை
வடித்திடும் சான்றோர் மகிழும் அரங்கம்
களித்திட அன்பினைக் காட்டு!       19.07.2009

அவை வணக்கம்

மங்கா நிலவின் மயக்க மதுவூட்டுமே
கங்குல் கிழித்து கலைக்குமோர் கங்கடம்
தங்கும் தரணியெங்கும் தண்தமிழாய் இங்கேயினி
பொங்கும் கவியரங்கைப் போற்று!




இறைவன் உறையும் இதயமும் உற்ற
மறையோர் புகல்கிற வாய்மையும் வாழ்வில்
கறையினைப் போக்கிக் கனவிலும் இன்ப
நிறைவைத் தருமே நிதம்!


கண்ணனின் தாசனே கம்பனுக்கும் தாசனாம்!
கண்ணான பாடலிலே காட்டிடுவான் தேனமுதை              

வீட்டினிலேகாற்றுவெளியினிலே
என்றுமே
கூட்டிடும் இன்பம் குவித்து!



மெத்தப் படித்திட்ட மேலோன் எனினும்தன்
சித்தம் கனிந்த செயலது வேண்டுமே!
எத்தகு மேன்மையினை எட்டிய போதுமே
வித்தகர்க்கு வேண்டாமே வீம்பு!

கற்றவர்க்குப் பண்பாகும் கள்ளமிலா உள்ளமே
பெற்றபலன் அஃதே பிறவிதனைப் போக்குமே!
சித்தம்தனை மாற்றிச் சிதைத்திடும் நற்பேரை
வித்தகர்க்கு வேண்டாமே வீம்பு!

இயற்கை பொழிகின்ற இன்பங்கள் கோடி!
வியப்பதுவோ என்னாளும் வீழ்வதில்லை அச்சுழற்சி!
சொத்தாகக் கல்வியினைச் சேர்த்துவிட்ட கற்றவரே
வித்தகர்க்கு வேண்டாமே வீம்பு!


இந்தியா என்னுமோர் இன்பத் திருநாடாம்!
முந்தைய நாள்முதல் முன்னே  
வழிகாட்டிச் 

சென்றதுவாழ்விலே தீதறு   பாதையை
இன்றும் இசைக்கும் இயம்பு!


அன்னை மடியில் அழகுக் குழந்தையின்
முன்னைச் சுகமே முழுதும் மறந்திட
பிள்ளைக் கனியது பேதமைத் துறந்திட
தள்ளும் வழியே படிப்பு!


கரம் பற்றுக

பாரதம் காக்கும் பயன்தரும் பண்பதைப் போற்றிடுவோர்
பாரளவும் புகழ் ஓங்கிட வாழ்பவர் சாற்றுகவே!
சாரமாம் ஞான ஒளியைப் பரப்பிட வாழ்ந்திடுவோர்
சாரவே நின்று சந்ததம் கரமதைப் பற்றுகவே!


அன்பு எங்கே!

பார்த்தாய்-பரவசமானது
சிரித்தாய்-சிந்தை மகிழ்ந்தது
பேசினாய்-தேகம் சிலிர்த்தது
அணைத்தாய்-இன்பம் பெருகியது
இணைந்தாய்-உலகம் மறந்தது

ஊடினாய்-உணர்வு நலிந்தது                              
ஒதுக்கினாய்-உள்ளம் மருகியது
ஏசினாய்-சினம் தகித்தது
வெறுத்தாய்-வெறி மீறியது
பிரிந்தாய்-நிம்மதி பிறந்தது



இதில் அன்பு எங்கே வாழ்ந்தது?

               



எத்தனை மார்க்கமோ> எத்தனை வர்க்கமோ
அத்தனையும் இங்கேயினி அத்தனைக் காட்டா!
வராதிருப்பது அன்பெனும் வற்றாதவோர் பண்பே 
இராமா நுசரின் இயல்!




0 comments: