Friday, October 21, 2011

கவிதைச் சரங்கள்



அலைகள்

அலையே போலும் வாழ்வினிலே 

அலையும் மனமும் பலவிதமாய்
நிலையே இலையே எனும்போதும்
நிலைத்த புகழுக் கேங்கிடுவார்!
விலையே கொடுத்து உலகினிலே
வீணாய்ப் பொழுதைக் கழித்திடுவார்!
குலையாத் திடமே பூமியிலே

குன்றாச் சுகமும் தந்திடுமே!

வாழும் நாளோ ஒருசிறிது

வாழ்வின் படிகள் பலவன்றோ!
தாழும் நிலையைத் தவிர்த்திங்குத்
தன்னை உயர்த்தல் கடனன்றோ!
வீழும் செயலின் பிடினின்று
விழித்தே எழுதல் முறையன்றோ!
சூழும் நிலைக்கே பணியாது
சூடும் வெற்றி நிலையன்றோ!

வீணில் உண்டு உறங்கியேயுன்

விதியை எண்ணி மறுங்காமல்
கானில் விழுந்த நீர்த்துளியாய்க்
கணத்தில் மறைந்தே அழியாமல்
பேணி நலங்கள் காத்தாலே
பேரும் நிலைக்க வழிசெய்வாய்!
தேனி எனவே உன்னன்பைத்
தேடி உலகம் சூழ்ந்திடுமே!

நொடியில் சென்ற இளம்பருவ

நோயைத் தந்த காதலதும்
பாடித் திரிந்த நாட்களிலே

பண்ணாய் இசைத்தத் தமிழதுவும்
தேடிக் கிடைக்காத் தெள் ளமுதாய்த்
தேனுக் கொப்ப சுவைதரவே
சூடி மலராய் நினைவினிலே
சூழ்ந்து நின்றே சுகந்தருமே!

இயற்கை தருமே இன்பங்கள்

இனிய தென்றல் தழுவிடல்போல்
வியத்தல் உண்டோ உறவினிலே
விழைந்தே அடையும் உயர்வதனை!
பயத்தல் உறுதி நன்மைகளே
பணிவும் அன்பும் கொண்டாலே
தயங்கா தினிமேல் தரணியிலே
தழைத்து வாழ்க வளமுடனே !






அன்புடைமை


தாயவளின் தனியன்பு

 தரணியிலே தானியங்கித்
  தவமேற் கொண்டே
சேயதற்குச் செய்விக்கும்
 சிறப்புக்கள் சொல்லிடவோ
  சான்று கோடி!
மாயமதை விளைவிக்கும்
 மாறாத புன்னகையே
  முந்தி நிற்கும்
வாயசைந்தால் வார்த்தைகளோ
 வண்தமிழை மாந்திவரும்
  வண்ணச் சீரே!

தன்னமுதம் தனைக்கலந்து

 தாலாட்டுப் பாட்டுடனே
  தருவாள் நித்தம்
விண்மீன்கள் விரலசைப்பில்
 விடுகதையாய் வந்துபோகும்
  வீட்டின் உள்ளே!
மன்னவர்கள் மாண்புடனே
 மண்ணிலாண்ட வகையெல்லாம்
  மருள வைக்கும்
கண்பொத்திக் கதவருகே
 கால்வலிக்கத் தவமிருப்பாள்

  களிப்பில் நின்றே!



செல்கின்ற பாதையெலாம்

 சீரடிகள் தாங்கிடவே
  செல்வாள் முன்னம்
வெல்கின்ற போதினிலே
 வெற்றிகொண் டாடிடுமே
  வெள்ளை உள்ளம்!
வல்வினைகள் ஒழித்திடவே
 வரம்வாங்கத் துடித்திடுவாள்
  வாய்த்த மானே
இல்வாழ்க்கை இனிப்புறவே
 இயன்றதெலாம் செய்திடுவாள்
  இன்பத் தேனே!

கொண்டவனைக் கும்பிடுவாள்

 கோயிலென வைத்திடுவாள்
  குடும்பம் தன்னை
வண்டெனவே சுற்றிவந்து
 வாழவைக்கும் சக்தியவள்
  வடிவம் காணீர்!
செண்டாகக் கட்டிவைத்துச்
 சுற்றமதைக் காத்துநின்று
  சுகமே பேணிக்
கொண்டாடும் குலதெய்வம்
 கொள்ளைகொள்ளும் அழகியவள்
  காணும் பேறே!

ஓயாத உழைப்பினிலே

 ஓடாகும் வரையினிலே
  ஒன்றி நிற்பாள்
சாயாத தூணாகிச்
 சாகின்ற தருணமட்டும்
  சகித்தி ருப்பாள்!
வாயார வாழ்த்தாத
 வாரிசென வாய்த்தாலும்
  வதங்க மாட்டாள்
தீயாகச் சுட்டாலும்
 தெவிட்டாத கருணைமழை
  தருவாள் தாயே!

அன்பென்றால் அவனியிலே

 அன்னையவள் வடிவழகே
  அறுதி ஆகும்
தன்னலமாம் சுவடில்லாத்
 தனிப்பிறவி வார்ப்புமவள்
  தங்கத் தேரே!
மண்மீதில் மாசில்லா
 மானுடத்தின் மரபுதாங்கும்
  மகுடம் அன்றோ
அன்றுமுதல் அணுவிருக்கும்
 அந்தமுமே அவளுடைமை
  அவளே அன்பே!


அழகெனும் அமுதே போற்றி!



அழகெனும் அமுதே போற்றி! 

 அழைத்திடும் விழிகள் போற்றி!
பழமென மின்னும் கன்னம்
  படைத்ததோ இனிய வண்ணம்
பழகிடா புதிய பாதை
  பார்த்திடா வண்ணச் சோலை
பழந்தமிழ்ப் பாடல் போலப்
  பருகிடச் செந்தேன் ஊறுமே!


தொட்டில் செல்வம்




அன்னையே தெய்வம் என்றே
  அவளையே பார்த்து நின்றேன்!
என்னையே பாசம் காட்டி
  ஏந்துவாள் காத்தி ருந்தேன்!
தன்னையே எண்ணி அன்பைத்
  தனக்குளே புதைத்து வைத்து
சன்னிதி சரணம் என்றே
  தாயவள் விட்ட தேனோ?



பன்முக வடிவாய் என்னைப்;

  படைத்தவள் உருவம் தோன்றும்!
இன்முகம் ஒன்றே போதும்
  இன்பமே கோடி சேரும்!
என்னாளும் இந்த எண்ணம்
  எனக்குளே நிற்கும் அம்மா!
அன்பெனும் அமுதே போற்றி!
    அழகெனும் வடிவே போற்றி!

               இறையெனும் நிறை


கறையிலா நிறைவே போற்றி!

நிறைவெனும் மகிழ்வே போற்றி!
மகிழ்வெனும் மதியே போற்றி!
மதியெனும் ஒளியே போற்றி!
ஒளியெனும் விடிவே போற்றி!
விடிவெனும் கரமே போற்றி!
கரம்தரும் வரமே போற்றி!
வரம்தரும் அன்பே போற்றி!
அன்பெனும் அமுதே போற்றி!
அமுதெனும் அருளே போற்றி!
அருளெனும் இறையே போற்றி!
இறையெனும் முதல்வா போற்றி!




அன்பெனும் ஒளியே போற்றி!

ஆண்டிடும் அறிவே போற்றி!
இன்சுவை மொழியே போற்றி!
ஈகையின் வடிவே போற்றி!
உண்மையின் தலமே போற்றி!
ஊட்டிடும் தாயே போற்றி!
எண்ணிலா உருவே போற்றி!
ஏற்புடைக் கலையே போற்றி!
ஐயமில் தயவே போற்றி!
ஒன்றெனும் இறையே போற்றி!
ஓங்கிடும் நலமே போற்றி!
ஓளடதக் கொடையே போற்றி!



அன்பெனும் ஒளியே போற்றி

  அழகெனும் சுடரே போற்றி!
மின்னிடும் முகிலே போற்றி!
  மிளிர்ந்திடும் நிலவே போற்றி!
ஒண்மலர் தாள்கள் போற்றி!
  உள்ளுறை இறைவா போற்றி!
பன்முக வடிவே போற்றி!
  பைந்தமிழ் மொழியே போற்றி!

அணைந்திடா விளக்கே போற்றி!

  அணுவினுள் அணுவே போற்றி!
அணைத்திடும் தலைவா போற்றி!
  அண்டமாம் ஆதி போற்றி!
இணையிலா உறவே போற்றி!
  இதந்தரும் கனிவே போற்றி!
வினைக்கொரு முடிவே போற்றி!
  வித்தகக் கலைஞா போற்றி!


வேண்டும்


வாக்கிலே மாறா உண்மை

 வாய்மையும் நிலைக்க வேண்டும்
தாக்கமாம் தமிழின் கேண்மை
 தரணியில் என்றும் வேண்டும்
தேக்கமோ அழிவின் பாதை
 திருந்தவே திடமும் வேண்டும்
ஊக்கமாம் உயர்வின் மேன்மை
 உணருமோர் தன்மை வேண்டும்

ஊழ்வினை மாற்றி வெல்லும்

 உவகையும் மனத்தே வேண்டும்
சூழ்ந்திடும் மனித நேயம்
 சுடர்விடும் மாண்பு வேண்டும்
தாழ்விலும் பாதை கண்டு
 தளிர்க்கவே மதியும் வேண்டும்
வாழ்விலே தோன்றும் இன்பம்
 வளர்க்கவோர் திறனும் வேண்டும்

கூர்மதி படைத்து நாளும்

 கூடுமொரு உறவு வேண்டும்
சேர்ந்திடும் அறிவுச் செல்வம்
 செழித்திடும் பண்பு வேண்டும்
சீர்;பெறும் சுற்றம் சூழச்
 சிரித்தநல் முகமே வேண்டும்
பார்புகழ் பெருமையெல்லாம்
 பரவிடத் திகழ வேண்டும்




தமிழினம் விழித்தல்; என்;றோ!


வேங்கையாய்த் தமிழன் பாரில்
 விழிதனில் வீரம் காட்டி
ஓங்கிய புகழும் நீங்க
 ஒடுங்கியே நரியாய் மாற
ஏங்கிய விழிகள் மின்ன
 இழிநிலை அகழி தாண்டி
தாங்கிய பெருமை மீள
 தமிழினம் விழித்தல் என்றோ!

செந்தமிழ்க் கவிதை பேசிச்
 செழித்தநல் சோலை தன்னில்
பைந்தமிழ்ப் பாடி நின்ற
 பாவலன் மாண்டே போனான்!
அந்தமிழ் மறந்தே இன்று
 அயல்மொழி புகழ்ந்து பேசும்

சந்ததி உண்மை கண்டு
 தமிழினம் விழித்தல் என்றோ!

கன்னிதன் கண்கள் சேர்ந்து
 காதலால் ஒருங்(கு)இ ணைந்து
மன்னவன் மரபு மாறா
 மாண்புடன் வாழ்ந்த அந்தச்
சின்னமாய் ஊரார் சொன்ன
 சிறப்புகள் போன தெங்கே!
தன்னிலை மாற்றி நெஞ்சம்
 தமிழினம் விழித்தல் என்றோ!

எந்தையும் தாயும் வாழ்வை
 இயக்கிடும்; தெய்வம் என்றே
சிந்தையும் களித்து நாளும்
 சிரித்தவர் எங்கள் முன்னோர்!
நொந்(து)அவர் சுற்றம் இன்றி
 நோயிலே வாடி நின்று
சந்ததம் மாய்ந்து வீழும்
 தமிழினம் விழித்தல் என்றோ!

தத்துவம் தன்னைச் சொன்ன
 தனயனாம் அருமை மைந்தன்
வித்தகன் தமிழன் தானே!
 விதிவழி மாறி நின்று
சத்தியம் சாய்த்து இங்கு
 சித்தமும் குலையா வண்ணம்
தத்தியம் காக்க வென்றே
 தமிழினம் விழித்தல் என்றோ!



குறளமுதம்

உலகினைக் காத்திடும் உத்தமனைச் சேர்ந்தேன்
நிலவுமே நெஞ்சில் நிறைவு.

மாறா இளமையின் மங்கலம் பொங்கிடும்
சீரே, தமிழே, வளர்க!

ஊழ்வினை மாற்றும் உரமதைக் கொள்வதால்
வாழ்வினில் வெற்றி வரும்.

இயற்கை பொழியுமோர் இன்மழைக் கொப்ப
இசைபட வாழ்வோர் இயல்பு.

விட்டுக் கொடுக்காது வேற்றுமை கொள்ளின்
ஒட்டாது போகும் உறவு.

இனிமையே நாடும் இயல்பது கொண்டோர்
இனியும் திளைக்கவே யாப்பு!

கம்பன் தமிழைக் கவியாய்ப் பொழிந்திடும்
எம்பால் உளதோ உலகம்?

ஓதாத நற்கவிதை, உன்தன் புகழ் போலவே
போதாது போதாது போ!


இழிநிலை

அழிக்க முடியுமோ
பழித்து அகலுமோ
இழிசேர் ஆண்மையின்
வழிநில் ஆணவம்!


அன்றும் விழலே
இன்றும் வீணிலே
என்றும் பொழியுமே
பெண்டிர் கண்ணீரே!

பிரிக்கும் கோடுகள்
வரிக்கும் நாடுகள்
தரிக்கும் யுத்தமே
குறிக்கும் கபடமே!

அணைப்பில் சுகம்பெற
இணையும் இல்லறம்
வினையே தட்சணை
மனையும் அழியுமே!

மண்ணில் ஏசுவும்
அண்ணல் காந்தியும்
கண்ணீர் பெருக்கிட
வன்மைப் படுகொலை!

உறவைத் தொடரும்
திறனோ ஒழிந்திட
பிறரை ஒதுக்கிடும்
புறமே தன்னலம்!


விஞ்சி நிற்பது

மண்ணிலே மகிழ்வைக் கூட்டி
 மாசிலா அன்பைக் காட்டும்
விண்ணதைக் கொண்டு வந்து
 விழிதனில் நிறுத்தி வைக்கும்!
தன்னிக ரில்லாப் பெண்ணின்
 தயவினை நாடிச் செல்வார்
பெண்ணெனும் மாயை என்று
 பேசுவோர் நாளும் நின்றே!

அழகென அமைந்த உள்ளம்
 அணைப்பிலே இதமே நல்கும்
பழகிடும் பாசம் தன்னை
 பகலவோர் மொழியும் இல்லை!
மழலையாய் வண்ணக் கோலம்
 வடித்தவள் கன்னி உருவில்
உழலுவோர் துன்பந் தன்னில்
 ஊன்றுகோல் அவளே அங்கே!

பெற்றவர் தாளே போற்றி
 பிறவியின் பயனாய்க் காத்து
உற்றவர் நலனை நாடி
 உரித்தென பணிவும் காட்டி          
சுற்றுளோர் சுகமே காண
 சுமைதனை ஏந்தி நிற்பாள்
வற்றிடா நதியாய் ஓடும்
 வனிதை அவளின் தொண்டே!
                                                                                                                                                       
கருவினைச் சுமந்த நாளே
 கடமையை ஏற்கும் பண்பில்
கருணையே வடிவாய்க் காணும்
 காவலும் வாழ்வில் தாயே!
பெருமையே நித்தம் கொண்டு
 போற்றுவாள் அரணாய் மாறி
இருளதில் வழியைத் தேடின்
 ஈங்கவள் ஒளியின் கீற்றே!

உடல்நலம் காக்க வேண்டின்
 உறுதுணை தாதிப் பெண்ணே!
இடர்மிகு உலகில் தேற
 ஈடிலா ஆசான் பெண்ணே!
தொடர்ந்திடும் துன்பம் நீங்க
 சூடவோர் மதியும் பெண்ணே!
கடலெனும் பிறவி ஆற்றைக்
 கடக்கவோர் தோணி பெண்ணே!

அடியவர் தொண்டு சேர்க்கும்
 ஆண்டவன் அருளின் பாதம்
கொடியவன் நெஞ்சம் மாற்றும்
 கொஞ்சிடும் கிளியின் தாக்கம்!
மிடிமையை உறவு தீர்க்கும்
 மீட்டிடும் உணர்வின் ஆக்கம்!
கொடியிடை மாதின் தொண்டே
 குவலயம் காக்கும் நன்றே!


கோடியே பெருமை பெண்ணின்
 கொடையது காதல், தாய்மை
நாடிய கடமை, வீரம்
 நாட்டுவாள் மரபின் தன்மை!
கூடிய பக்தி, ஞானம்
; குலையுமோ ஆற்றல் தானும்!
பாடிய தென்றல் கூறும்
 பெருமையில் விஞ்சும் தொண்டே!



இணைந்த நட்பு


ஆதி மனித வாழ்வுமுதல்

 அல்லல் வருமோர் தருணத்தில்
பீதி விலகக் காத்ததுவும்
 பின்னர் அணைத்து நின்றதுவும்
சாதி முதலாய்ப் பிரிவுகண்டும்
 சலியா விதமாய்த் தழைத்ததுவும்
நீதி குலையா நெறியுடனே
 நிலைத்து நிற்கும் நட்பொன்றே!

காணும் உடலோ இரண்டாகும்

 காட்சி இருவர்க் கொன்றாகும்
பேணும் நலனும் மற்றவர்க்காய்ப்
 பின்னிப் பிணையும் உறவாகும்!
தேனும் பாலும் கலந்ததுபோல்
 தெவிட்டா வண்ணச் சித்திரமாய்
வேணும் வேணும் எனும்படியே
 வேட்கைக் கொள்ளும் நட்பொன்றே!

இளமைத் துளிர்க்கும் பருவமுதல்

 இன்ப நினைவு மலர்ந்திடுமே
வளமை பொங்க வாழ்வெல்லாம்
 வருமே என்றும் உணர்வுடனே!
தளரும் உடலின் சுமையெல்லாம்
 தாங்கிச் சென்று அருகினிலே
வளர்ந்து செழித்த மரம்போல
 வண்மை தருமாம் நட்பொன்றே!
                                                                                      
காதல் வந்து மோதிடலாம்
 கருத்தும் கலந்து மாறிடலாம்
பாதச் சுவடும் காலத்தால்
 பாதை மாறிச் சென்றிடலாம்!
சாதல் நேரின் பிரிந்திடலாம்
 சாக்கா டுவரை துணைவந்து
மோதல் இன்றி மன்பதையில்
 மாறா நிலையில் நட்பொன்றே!

கண்ணன் நட்பில் குசேலருமே

 கனிந்து மகிழக் கண்டோமே
மன்னர் நட்பில் ஒளவையுமே
 மனிதம் காணக் கேட்டோமே!
கண்ணாய் வளரும் நட்பினிலே
 கள்ளம் ஏதும் புகுவதில்லை
என்றும் வாடா வகையினிலே
 நின்று நிலைக்கும் நட்பொன்றே!

கெடுக்கும் தீய சக்திதனை

 கொடுக்கும் புதிய தென்பதனை
தடுக்கும் தருணம் வரும்போதும்
 தளரா துள்ளம் இணைந்திடுமே!
விடுக்கும் பாசத் தொடர்பினையே
 விள்ளல் தகுமோ உறவுதனை
இடுக்கண் வருங்கால் துடித்துநின்று
 இன்னல் களையும் நட்பொன்றே!

தகிக்கும் வெயிலில் குளிர்தருவின்

 தணலைத் தணிக்கும் தென்றலதே!
சகிக்க இயலா இடர்தனிலும்
 சுகமே அளிக்கும் சுடரொளியே!
மகிழ்வைத் தந்து துன்பத்தில்
 மனதைக் காக்கும் மாண்பிதுவே!
முகிழ்க்கும் மலராய் மணம்வீசி
 முன்னே செல்லும் நட்பொன்றே!

அன்னை காட்டும் அன்பினையே

 அருவி போல அளித்திடுமாம்!
முன்னைக் காலம் மறந்தேக
 முற்றும் நம்மை ஆண்டிடுமாம்!
பின்னும் குறைகள் பிறந்தாலும்
 பிணையும் உறவால் களைந்திடுமாம்!
தன்னை நாடி நாளெல்லாம்
 தழுவும் பண்பும் நட்பொன்றே!



அசையும் தென்றல்


அசைந்துவரும் தென்றலென அருகில் வந்தே

 ஆசையோட ணைக்கவிடு சின்னச் சிட்டே!
இசைந்துதரும் முத்தமென்ற இனிமை ஒன்றே
 இசைக்குமின்ப கீதமென்றன் மனதுக் குள்ளே!
திசையெங்கும் பேரின்பம் தோன்றும்! உள்ளம்
 திகைக்கின்றேன் நீயில்லா நொடியில்! நானும்
வசைபாடும் இவ்வுலகை மறப்பேன் உன்னை
 வாயாரச் சீர்;பாடி மகிழும் போதே!


குழந்தைச் சிரிப்பு


வண்ண வண்ணப் பூக்களுமே

 வடிவாய் இங்கே மணம்பரப்ப,
எண்ண எண்ணத் தொலையாத
 எழிலும் எங்கும் நிறைந்திருக்க,
சின்னச் சின்ன விழிகாட்டிச்
 சிறுகை கொண்டு சிலிர்த்திடவே
என்னை, உன்னை மறந்திடவே
 எழிலாய் மழலைச் சிரித்திடுமே!


பாவேந்தர்  பாரதிதாசன்



பாரதி தாசன் பாட்டு

 பாவலர் சொல்லக் கேட்டு
பாரடி இங்கே விந்தை
 பாவையென் மங்காச் சிந்தை
பாரம் தாளா தென்று
 பாக்களைப் பொழிய வந்தும்
ஓரெழுத் திங்குக் காணேன்
 ஒருமலர் தொடுத்த பின்னே!

கற்பனைத் தாகம் மேவக்

 கவிதையாம் வெள்ளம் பாயக்
கற்பெனும் மாட்சி காட்டிக்
 காதலைப் பாடி வைத்தான்!
கற்சிலை என்றே நெஞ்சில்
 கவிஞனின் பாட்டு கொஞ்சும்!
கற்றவர் உள்ளத் துள்ளே
 களிப்பினை நிலையாய்த் தந்தே!
                                                                                      
அனைவரும் பாடி விட்டால்
 அன்னவர்க் கென்ன கீர்த்தி!
முனைபவர் எல்லாம் வெற்றி
 முழங்கிட ஆசை என்றால்
இணைந்திட வேண்டும் அன்னை
 எழில்மலர் தாள்கள் போற்றி!
நினைவினில் கவிதை என்றும்
 நிலைத்திடல் நன்றே அம்மா!



முகமும் மலரும்


நகையில் மறைந்ததும் நாணமதோ!

முகையில் பிறந்ததும் முல்லையதோ!
சிகையும் காற்றினில் சீர்குலைய
பகையும் கொண்டதோ பனிமலரே!


வாழ்வின் எல்லை


மூப்பென்றும் முடமென்றும்

 முற்றிவிட்ட நோயென்றும்
  மூளும் தொல்லை
சாப்பிட்ட பத்தியமும்
 சாக்காட்டைத் தவிர்ப்பதில்லை
  சாவே எல்லை
காப்பாற்ற யாருமில்லை
 கடைசிவரை துணையுமில்லை
  காணும் உண்மை
கூப்பிட்டுக் கடவுளையே
 கேட்டாலும் பதிலில்லை
  கூடும் விந்தை!

உதிர்ந்த மலர்


வெள்ளைப் பனித்துளி - ஒன்று

கொள்ளை அழகுடனே
வெள்ளி மலராய் - மனதை
அள்ளிச் சிரித்ததம்மா !

சின்ன அரும்பு - எழில்

வண்ண உருக்கொண்டு                
வெண்மை படர்ந்து - அங்கே
எண்ணம் கவர்கிறதோ !

களித்துச் சுவைத்து - நின்ற

சிலிர்ப்பு அடங்கவில்லை
புவியே சரணம் - என்று
உதிர்ந்து கரைந்ததம்மா !

மன்னுயிர் எல்லாம் - மரணம்

வென்று நிலைப்பதில்லை
என்னுமோர் கூற்றுக்(கு) - இங்கே
தன்னிலை காட்சியிதோ !


உருகும் உடல்


உறுப்புகள் ஒன்றி உடலில் இணைந்தும்

உறுதுணை செய்துமே ஊனினைக் காக்கும்!
உருவை அழிக்குமோர் ஊழ்வினை செய்யின்
உருகும், உலையும் உடல்!



மழலையின் வெளியுலகு


பேதமை, உண்மையும் பேரெழில் வண்ணமும்

தீதறு சொல்லுமாய் தீண்டிடும் செல்வமே!
உன்மன வானில் உவப்பினை நல்கவே
இன்பம் தருமோ உலகு!


மறையுமா?

புவியில் திரியுமோர் புல்லர் இனமாம்! வனிதையரைத்
தவிக்க விடுவராம் தன்னலப் போக்கால்! மடந்தையரோ
செவிக்கு இனிமையால் சிந்தை மயங்கிச் சிதைந்தழிவர்
குவித்துப் பெருக்கும் குணக்கே டொருநாள் மறைந்திடுமே!

0 comments: